1 இராஜாக்கள் 8:52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக…..
8:66 எட்டாம் நாளில் ஜனங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்கு போய்விட்டார்கள்.
சாலொமோன் வாக்குத்தத்தின் பிள்ளை. தன்னுடைய வயதுக்கு மீறிய ஞானத்தை கர்த்தரின் அருளால் பெற்றவன். அவன் வாழ்க்கையில் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதையே முக்கிய பணியாக கருதினான் என்று படித்தோம்.
இன்று சாலோமோனின் வாழ்வில் நாம் காணும் மனமகிழ்ச்சி என்ற வார்த்தயைப் பற்றிப் பார்க்க போகிறோம். சங்கீதம் 32:11 ல் நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள், செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள் என்று தாவீது காட்டிய மன மகிழ்ச்சியைத்தான் இந்த வார்த்தை குறிக்கிறது.
இந்த மன மகிழ்ச்சி மிக்க சூழலுக்கு என்ன காரணமாயிருந்திருக்கும் என்று யோசித்தால் இதே அதிகாரம் 6 ம் வசனத்தில் நாம் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய ஆலயத்தில் வைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
2 சாமுவேல் 6 ம் அதிகாரத்தில் உடன் படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குள் கொண்டு வந்த போது தாவீதுராஜா குதித்து நடனமாடியதும், இஸ்ரவேல் மக்கள் கெம்பீர சத்தத்தோடும், எக்காள தொனியோடும் கொண்டு வந்தது ஞாபகத்துக்கு வருகிறது அல்லவா?இஸ்ரவேல் மக்களுக்கும், தாவீதுக்கும் ஒரு உணர்ச்சி மிக்க, மன மகிழ்ச்சி நிறைந்த சம்பவம் அது.
இங்கு சாலோமோனும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். அதைத்தான் நாம் தேவாலய அர்ப்பணிப்பின் போது சாலொமோன் செய்யும் ஜெபத்தில் காண முடிகிறது. அவனுடைய ஜெபத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் அவன் கர்த்தர் மேல் காட்டிய ஆர்வமும், சந்தோஷம் நிறைந்த உணர்ச்சியும் தெரிய வருகிறது.
இஸ்ரவேல் மக்களும், அவர்களின் ராஜாவும், கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றியதை உணர்ந்தவுடன் மன மகிழ்ச்சியடைந்தனர். அவர்களுடைய சந்தோஷம் ஆரவாரமாக மாறியது.
இன்று தேவன் உன் வாழ்வில் செய்திருக்கும் எல்லா நன்மைகளையும் நினைவுகூறுவாயானால் உன் உள்ளமும் ஆனந்த களிப்பின் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
கர்த்தாவே நான் தூரமாக ஓடினேன் நீரோ என்னைப் பின் தொடர்ந்தீர்,
நான் என்னுடைய வழியில் நடந்தேன் நீரோ அவைகளை அறிந்திருந்தீர்,
நீர் என் கரம் பற்றினீர், நானோ திணறிப்போனேன்.
ஒரு நொடி உம்முடைய உன்பின் கண்களைக் கண்டேன்,
அதில் கொழுந்து விட்ட உம்முடைய பேரன்பைக் கண்டேன்.
என் வாழ்வை உமக்கு அடிமையாக்கினேன்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
