2 நாளாகமம் 1:15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்.
கடந்த நாட்களில் இராஜாக்களின் புத்தகத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள நாளாகமத்தையும் வாசித்தேன்.வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது தேவனுடைய கிரியைகளின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது, சாலொமோன் இஸ்ரவேலை ஆண்ட நாற்பது வருடங்களில், இஸ்ரவேல் சமாதானத்தோடு இருந்தது மட்டுமல்லாமல் இஸ்ரவேல் மிகவும் செழித்தும் இருந்தது.
நம்முடைய இன்றைய வேதாகமப்பகுதி இஸ்ரவேலின் செழிப்பைக் காட்டுகிறது. பொன்னும் வெள்ளியும் சாதாரண கற்கள் போல மிகுதியாய் இருந்தன. 2 நாளாகமம் 8 ம் அதிகாரம் அவன் கட்டிய பட்டணங்களைப் பற்றி கூறுகிறது. அவன் சேகரித்த பொருட்களை வைக்கவே பல பட்டணங்கள் தேவைப்பட்டது போலும்.
இவ்வளவு சொத்து மிகுந்திருந்த போதும், இஸ்ரவேல் மக்கள் யாருமே சாலொமோனுக்கு அடிமைகளாக வாழவில்லை. ஒருவேளை சாலொமோனின் ராஜ்யத்தில் பெண்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று சிந்திப்போமானால், சாலொமோன் எழுதிய நீதிமொழிகளின் புத்தகம் 31 ம் அதிகாரத்தில் விளக்கம் கொடுக்கிறார்.
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்கு படியளக்கிறாள்.
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள். தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள், மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு ( நீதி 31:15,16,22)
என்ற வசனங்கள் அதற்கு ஒரு உதாரணம். அந்தப் பெண்களுக்கு சமைக்கவும் தெரிந்திருந்தது, வியாபாரம் செய்யவும் தெரிந்திருந்தது, தங்களை அலங்கரிக்கவும் தெரிந்திருந்தது. சாலொமோனின் ராஜ்யத்தின் பெண்கள் சமுதாய நல விருத்தியிலும் பங்குபெற்றதால் அவர்களை உலகமே புகழ்ந்தது.
இஸ்ரவேலின் புகழ் உச்சியில் இருந்த கால கட்டம் அது. அவர்களிடம் மிகுதியான பொன்னும், வெள்ளியும் மட்டுமல்ல, அதை விருத்தியாக்கும் ஞானமும் இருந்தது. இப்படிப்பட்ட மிகுதியால் இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு பின் வாங்கிவிடக்கூடாது என்றே மோசே அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.
என் சாமர்த்தியமும், என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக.. ( உபாகமம் 8: 17,18)
நம்மில் எத்தனைபேர் ஒரு வீடு கட்டியவுடன், இதை எப்படி கட்டி முடித்தேன் என்று பெருமை பாராட்டுகிறோம். நாம் சம்பாதித்திருக்கிற சொத்து, வங்கியில் இருக்கும் பணம் அத்தனையும் நம்முடைய திறமையால் மட்டுமே வந்தது என்று நினைக்கிறோம்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே, நாம் பெற்றிருக்கும் ஞானமும் செல்வமும் தேவனுடைய நாம மகிமைக்காக அவர் நமக்கு அருளியிருக்கும் பரிசுதான் என்பதை நாம் ஒருபோதும் மறந்து போக வேண்டாம்.
சிறியதோ அல்லது பெரியதோ நாம் சம்பாதித்தது அனைத்துமே அளவில்லாமல் நம்மை நிரப்ப வல்ல தேவாதி தேவன் நமக்கு அருளிய ஈவுதான்! நாம் பெருமைப்பட எதுவுமேயில்லை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Thank you Akka
Sent from Yahoo Mail on Android