1 இராஜாக்கள் 10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்
சாலோமோனின் ஞானத்தையும், அதன் மூலம் மகிமைப்படும் கர்த்தருடைய நாமத்தையும் பற்றி நேரில் கண்டு அறிந்துகொள்ளவே சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய பரிவாரத்தோடு புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம்.
இன்றைய வேதாகமப் பகுதி அவள் வெறுங்கையோடு வரவில்லை , விலையேறப்பெற்ற பரிசுகளோடு வந்தாள் என்று கூறுகிறது. அநேகர் அவளுடைய வருகையின் நோக்கம் ஒரு அரசியல் காரணம்தான் என்று கூறினாலும், நாம் வேதத்தின் படி உள்ளதை உள்ளபடி பார்த்தால், அவள் சாலொமோனின் ஞானத்தை அறிவதும், அவன் நேசித்த, அவன் பிரமாண்டமாக கட்டிய அந்த ஆலயத்தில் வாசம் செய்யும் தேவனைப்பற்றி அறிவதும் தான் அவள் நோக்கம்.
அந்த ராஜஸ்திரீ எருசலேமை வந்தடைந்தபோது, அவளுடைய பரிசுகளை சுமந்து வந்த ஒட்டகங்களும் வந்து சேந்தன. ஒருவேளை அவள் தன்னுடைய தேசத்து செல்வத்தின் பெருமையை சாலொமோனுக்கு காட்ட விரும்பியிருக்கலாம். அல்லது ஒருவேளை இந்த பரிசுகளை உபயோகப்படுத்தி இஸ்ரவேலை தன்னுடைய நாட்டோடு வியாபார சம்பந்தம் செய்யும்படியாக அழைப்பு விடும் எண்ணம் இருந்திருக்கலாம்.
ஆனால் நான் இந்த முழு வேதாகமப் பகுதியையும் வாசித்து விட்டதால் இன்னொரு காரணத்தையும் என்னால் சிந்திக்க முடிந்தது. அவள் ஒரு தாராள மனதுடைய பெண்மணி, இஸ்ரவேலுக்கு வந்த அவள் சுயநலமற்ற இருதயத்தோடும், தேவனாகிய கர்த்தரைப் பார்க்க வரும்போது பரிசுகளோடும் வந்தாள்.
இது எனக்கு கர்த்தராகிய இயேசுவைப் பார்க்க தூர தேசத்திலிருந்து புறப்பட்டு வந்த ஞானசாஸ்திரிகளை சற்று ஞாபகப்படுத்திற்று. எத்தனை விலையுயர்ந்த பரிசுகளை அவர்கள் இயேசு பாலகனுக்கு கொண்டு வந்தார்கள் என்று நாம் அறிவோம்.
தாராளமாய் கர்த்தருக்கு கொடுப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் இன்னும் கொஞ்சம் தாராளமாய் கொடுத்திருந்திருக்கலாமோ என்று என்றாவது நினைத்ததுண்டா?
தாராளாமாய்க் கொடுப்பவர்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை.
மாற்கு 12:41 – 44 ல் கர்த்தராகிய இயேசு, காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு ஏழை விதவை ஒரு துட்டுக்கு சரியான இரண்டு காசைப் போட்டாள். இயேசு தம்முடைய சீஷரிடம், காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரைப் பார்க்கிலும் அந்த விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று கூறினார்.
நீ கொடுப்பதை இழக்க மாட்டாய்! நீ இழந்தது உன்னிடமே இருக்கும்! என்ற பெர்சிய பழமொழியைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
கொடு உனக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்! கிறிஸ்துவுக்காய் கொடுத்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை! நீ கொடுக்கும்போது கர்த்தர் உன் இருதயத்தைப் பார்க்கிறார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
