1 இராஜாக்கள் 10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
சேபாவின் ராஜஸ்திரீயைப்பற்றி சில நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஒரு அராபிய நாட்டை சேர்ந்தவள். சாலொமோனையும் அவனோடு இணைந்திருந்த தேவனுடைய நாமத்தையும் அறிய வேண்டி எருசலேமுக்கு வந்தவள்.
இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, அவள் சாலொமோனிடம் அநேக காரியங்களை கேட்டறிந்தாள் என்று பார்க்கிறோம். படிப்பும், ஞானமும் ஆண்களுக்கே உரித்தான அந்த காலகட்டத்தில், இந்தப் பெண் அநேக ஆழமான கேள்விகளோடு சாலொமோனிடம் வருவதைப் பார்க்கிறோம். சாலொமோனுடைய வார்தைகளை ஆவலோடு அமர்ந்து கேட்டிருப்பாள்.
இப்படியாக இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளை ஆவலோடு கேட்ட இன்னொரு பெண்ணும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறாள். வேறு யாருமில்லைங்க! நம்முடைய மரியாள்தான்!
அவளுடைய சகோதரியான மார்த்தாளுக்கு எது மிகவும் முக்கியமான வேலை என்று தோன்றியதோ அதில் கொஞ்சம்கூட நாட்டம் காட்டாமல், மரியாள் இயேசுவண்டை அமர்ந்திருந்ததைக் கண்ட மார்த்தாள், இயேசுவிடமே அவளைப் பற்றிய குறையை எடுத்துச் செல்கிறாள். அந்த சமயத்தில் கர்த்தராகிய இயேசு மார்த்தாளை நோக்கி,
… மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். ( லூக்கா 10: 41-42)
சேபாவின் ராஜஸ்திரீக்கும், பெத்தானியாவை சேர்ந்த மரியாளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். இருவரும் தேவனைப்பற்றி அதிகமாய் அறிந்துகொள்வதை தெரிந்து கொண்டார்கள். இருவரும் யாரிடம் கற்றுக் கொள்ள அமர்ந்தார்களோ, அவர்கள் இவர்கள் திருப்தியாகும்படி போதித்தார்கள்.
ஆனால் இவர்கள் இருவர் மட்டும் அல்ல, கர்த்தராகிய இயேசு ஒரு உவமையைக் கூறுவதைப் பாருங்கள்,
பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அதைக்கொள்ளுகிறான். ( மத்தேயு 13:45-46)
இந்த மனிதன் விலை மதிப்பற்ற ஒரு முத்தைக் கண்டுபிடித்த போது, எப்படியாவது , தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் விற்றாவது அதை அடையவேண்டும் என்று முடிவு செய்தான் என்று பார்க்கிறோம்.
சேபாவின் ராஜஸ்திரீ எடுத்த முயற்சிகளைப் பார்க்கும்போது , கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் என்று சொல்லப்பட்ட யூதர்கள் அல்லாதவர்கள் கர்த்தர்மேல் கொண்ட தாகமும், அவரை அறிய உள்ள வாஞ்சையும் தெரிகிறது.
இந்தப் பெண்ணின் கதை இன்று நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. கர்த்தரை முழுமனதோடு தேவனுடைய வார்த்தையின் மூலம் தேட வேண்டும் என்பதுதான். நாம் தேடும்போது எல்லா மறை பொருளும் நமக்குத் தெளிவாகும்.
வேதம் நமக்கு அளித்திருக்கிற மகா பெரிய பரிசு என்று நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய இரட்சகராகிய இயேசுவையும், அவருடைய அன்பையும், கிருபையயும் வேதம் எனக்கு அதிகமாக வெளிப்படுத்தும்போதெல்லாம், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுக்கும் போதெல்லாம், உம்மையன்றி நான் வேறெங்கு போவேன் ஆண்டவரே என்று அவருடைய பாதத்தை பற்றிக்கொள்ளத் தோன்றும்.
தேவனுடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய சத்தத்தை கேட்கத் தவறாதே! மரியாளைப்போல நல்ல பங்கை தெரிந்து கொள்ளத்தவறாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Thank you Annka
Sent from Yahoo Mail on Android
Amen Sent from Yahoo Mail on Android