கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1566 இலக்கை மட்டும் நோக்கிச் செல்!

1 இராஜாக்கள் 16:1-3 பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்; நான் உன்னைத் தூளிலிருந்து  உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துக்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.

இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களை ஒரு பூதக்கண்ணாடி போட்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல், யூதா என்ற இரு ராஜ்யங்களும் இருந்த நிலையைப் பார்த்தால், ஒரு வெளியாட்களான நாமே தேவனாகியக் கர்த்தர் எப்படி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த ராஜ்யங்களையும்,  கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்று சொல்லப்படும் இஸ்ரவேல் ஜனங்களையும் பார்க்கும்போது ஒருவேளை தேவனாகியக் கர்த்தர் இந்த அநியாயங்களை பார்க்கவே இல்லையோ என்றும் தோன்றும்.

ஆனால் இவையாவும் தேவனாகிய கர்த்தர் முன்கூட்டியே அறிந்திருந்தார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நம்மை சுற்றிலும் நடக்கும்போது, நம்முடைய பரலோக தேவனின் சிங்காசனத்தையும், அவருடைய கிருபாசனத்தையும் மட்டுமே நாம் உற்றுப்பார்க்க வேண்டும். அவரே நம்மை ஆளுகை செய்பவர், அவருக்கு எட்டாத எந்த செயலும் நடந்து முடியாது என்பதை நாம் அப்பொழுது அறிந்து கொள்ள முடியும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது ஒரு போட்டியில் கலந்து கொண்டேன். அது கைகளை மட்டும் சமநிலைப்படுத்தி ஒற்றையான கம்பத்தின்மேல்  நடக்கவேண்டும்.  ஆனால் பலமுறை முயற்சித்தும் நான் என்னுடைய சமநிலை தவறி கீழே விழுந்துவிட்டேன்.

இதெல்லாம் நமக்கு வராது, போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  நான் அந்த விளையாட்டில் தடுமாறுவதைப் பார்த்த என்னுடைய ஆசிரியர் என்னை அழைத்து, நீ உன் கால்களைப் பார்க்காதே, தரையையும் பார்க்காதே, அந்தக் கம்பத்தின் எல்லையைப்பார். பின்னர் ஒவ்வொரு அடியாக அதனை நோக்கி செல் என்று கூறினார்.

இந்த அறிவுறை என்னை ஒரு ஒலிம்பிக் வீராங்கணையாக மாற்றிவிட்டது என்று சொல்ல எனக்கு மிகவும் ஆசைதான்,  ஆனால்!!!!!!!  அது நான்  ஒருமுறையாவது கீழே விழாமல் நடக்க நிச்சயமாக உதவியது.

இந்த உலகத்தில் நடப்பவைகளையும், நம்முடைய சொந்த வாழ்வில் நடப்பவைகளையும் பார்க்கும்போது இது எவ்வளவு உண்மை. நாம் நம்முடைய கண்களை விலக்காமல் நம்முடைய இலக்கை மட்டுமே நோக்கி செல்லவேண்டும்.

ஒருவேளை இன்று நீ நடக்கும் பாதை மிகவும் குறுகியதாகவும், நீ கடந்து வரும் பாதை மிகவும் நீண்டதாகவும் இருப்பதாக உனக்குத் தோன்றலாம். பரலோகத்தில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர்! ஆளுகை செய்பவர்! இந்த செய்தி நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது!

கர்த்தருக்குத் தெரியாத ஒரு புல் முளைப்பதில்லை,  ஒரு பூவும் மலருவதில்லை!      இவையாவும் தேவனுக்கு மகிமை கொண்டு வருபவைதான்! 

கர்த்தருக்குத் தெரியாத ஒரு மேகமும் எழும்புவதில்லை! ஒரு இடி சத்தமும் இல்லை!இவையாவும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்பட்டவைதான்!

இவை யாவையும் அறிந்த தேவாதி தேவன் உன்னையும் அறிவார்! உன் கண்களை அவரை விட்டு விலக்காதே! இலக்கைநோக்கி செல்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment