கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1576 எண்ணிப்பார் நீ பெற்ற நன்மைகளை! மறந்து போகாதே!

எண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;

நீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”

 நானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.

அவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை.  என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன! அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம்! மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.

நாம் எவ்வளவு  மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும்! அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்!

அதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.

கர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி! இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம்! வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன! என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம்! ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள்! அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா!

கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்?

1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற

வேண்டும் என்று விரும்பினார்.  ( உபாகமம்: 5:15)

2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து

புறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)

3  அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.

கர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,

நான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.

ஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)

ஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது!

அவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது!

4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.

லூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று

சொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்

தூணானாளே!

5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை

செய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற  செயலால்

அவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி

சொன்னார்!

இன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார்? அவர் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை மறந்து போனாயோ? அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார்! அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்!

 எண்ணிப்பார்! எண்ணிப்பார்! மறந்து போகாதே!

 

 உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment