1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
கர்மேல் பர்வதத்தில் நடந்த சம்பவங்களை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். நான் அன்று எலியாவோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்த பின்னர், எலியா மலையின் உச்சிக்கு ஏறுகிறான். அங்கு அவன் தரையிலே பணிந்து, தன் முகம் முழங்காலில் பட குனிந்து, தன் பிதாவாகிய தேவனோடு உறவாடுகிறான்.
எலியாவுக்கு தேவன் தான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவதாகக் கூறினாரே, எலியாகூட இதை ஆகாபிடம் சொல்லவில்லையா, பின்னர் ஏன் அவன் மழைக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நானாக இருந்திருந்தால் அன்றைய தினத்தில் நடந்தவைகளைப் பார்த்தபின் ஆளை விட்டால் போதும் என்று சென்றிருப்பேன். ஆனால் இங்கு எலியா முகங்குப்புற பணிந்து தேவனோடு உரையாடுவது நான் இந்த எலியாவின் வாழ்க்கையிலிருந்து இன்னும் அதிகமாக ஜெபத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியது.
எலியாவின் ஜெபத்தில் முதலில் நான் கண்டது தேவனுடைய சமுகத்தை எப்படி நெருங்குவது என்பதுதான். அவன் தரையிலே பணிந்து தேவனை நாடியது அவனுடைய மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. இப்பொழுதெல்லாம் தேவனுடைய சமுகத்தை பயத்தோடும் நடுக்கத்தோடும் நாடுவது நமக்கு மறந்தே போய்விட்டது என்று நினைக்கிறேன்.எலியா தரையிலே பணிந்து தேவனை நாடியது அவன் தன் பிதாவாகிய தேவனை எவ்வளவு மரியாதையோடும், தாழ்மையோடும் அணுகினான் என்று காட்டுகிறது.
எலியா கர்மேல் மலை உச்சியில் தரையில் பணிந்து, குனிந்து ஜெபித்தபோது, அவன் தேவனுடைய சமுகத்தில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து, தேவனோடு ஒப்புரவாகி, அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு ஜெபித்ததைப் போல இருந்தது. ஆம்! ஒன்றைமட்டும் நாம் மறந்து போகக் கூடாது! நாம் அவருக்காக செயல்படுத்தும் காரியங்கள் எதுவும், அது கர்மேல் மலைமேல் எலியா நடத்திய பெரிய வல்லமையின் செயலாகக் கூடாக இருக்கட்டும், இவை எதுவும் நம்மை தேவனோடு ஒப்புரவாக்க முடியாது. சஙீதக்காரன் எழுதுவது என்றும் நம் நினைவில் இருக்க வேண்டும்.
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். (சங்கீதம் 51 : 17)
பிதாவாகிய தேவனானவர் நாம் அவருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி ஒவ்வொரு நாளும் நாம் அவரோடு ஒப்புரவாகுவதையே நம்மிடம் விரும்புகிறார். நாம் ஏறெடுக்கிற பலிகள் அல்ல நொறுங்குண்ட ஆவியே தேவனுக்கேற்கும் பலிகள்! ஆதலால் நான் அவருக்காக இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று ஓடிக்கொண்டு, தேவனுடைய சமுகத்தை மனத்தாழ்மையோடு நெருங்கும் நேரத்தை மறந்து விடாதே!
தேவனுடைய மனிதனாகிய எலியா பணிந்து, குனிந்து, தன்னைத் தாழ்த்தி ஜெபிப்பதைப் பார்க்கும்போது , நாமும் விசுவாசத்தில் அவருடைய கிருபாசனத்தை நெருங்க முடியும், அவர் நமக்கு வாக்குக் கொடுத்தவைகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நிச்சயம் வருகிறது, எனெனில் அன்று எலியாவின் ஜெபத்தைக் கேட்ட தேவன் இன்று நம் தேவன் அல்லவா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
