கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1785 யேசபேலின் முதல் தாக்குதல் எப்படி பட்டதோ?

1 இராஜாக்கள் 21: 1 – 7  இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.  ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.

இன்றும் நாம் யேசபேலைப் பற்றிப் படிக்கப் போகிறோம். நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு சம்பவம் இது. இந்த நாபோத்தின் திராட்சத்தோட்டத்தின் கதையை சற்று ஆழமாக நோக்கினால் இது யேசபேலின் நடத்தையைத் தான் நமக்குக் காட்டுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி வேதம் கூறுவதைப் பார்ப்போம். ஏனெனில் வேதத்தின் ஆரம்பமும் முடிவும் சத்தியம். ஆகாபின் இந்த அரண்மனையை அவனுடைய குளிர்காலத்து அரண்மனை என்று வேதாகம வல்லுநர் கூறுகின்றனர். அதனருகில் நாபோத் என்னும் மனிதன் திராட்சை தோட்டம் வைத்திருந்தான். ஒருவேளை அது அரண்மனையின் சமையல் கூடம் அருகில் இருந்ததோ என்னவோ, ராஜாவுக்கு அதை கீரைத் தோட்டமாக்கவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

முதலில் ஆகாப் அந்த திராட்சைத் தோட்டத்தை அவனிடம் கிரயமாகவோ அல்லது அதற்கு பதிலாக வேறொரு தோட்டத்தைக் கொடுப்பதாகவோதான் விலை பேசினான். அவனுக்கு நாபோத் அதைக் கொடுக்க முடியாது என்று சரியான காரணத்தோடு சொல்லி விட்டான். இஸ்ரவேலின் தேவன் ஏழைகளுக்கு நியாயம் வழங்கப்படும்படியாய் அநேக கட்டளைகளை கொடுத்திருந்தார்.

நாபோத் முடியாது என்றவுடன் ஆகாப் முகம் சுருங்கியவனாய்  அரமனையை நோக்கி செல்கிறான். வீட்டுக்கு போனவுடன் சாப்பிட மறுத்துவிட்டு படுக்கைக்கு செல்கிறான். பாவம் ஆகாப்! அவன் ஆசைப்பட்டது அந்த இஸ்ரவேல் நாட்டில் அவன் கைக்கு எட்டவில்லை. எனக்கு வேண்டும் என்று சிறு பிள்ளையைப் போல தரையில் உருளாததுதான் மிச்சம்!

இங்கு தான் புத்திசாலியான ராணி வருகிறால். ஒருவேளை இதற்கு முன்னரும் ராஜா அடம் பிடித்த காரியங்களை அவள் முடித்துக் கொடுத்தாளோ என்னவோ! அவளுக்கு அவன் காட்டின அடையாளங்கள் நன்றாகவே புரிந்தது. உடனே களத்தில் இறங்குகிறாள். முதலில் ஆகாபுடைய மனதை சரிப்படுத்த வேண்டும்! அவன் நினைவுகளை மாற்றவேண்டும். அவனால் அடைய முடியாது ஒன்றும் இல்லை என்பதை அவன் மனதில் நிற்க செய்ய வேண்டும்! இதுவே முதல் அட்டாக்!

ஏன் இப்படியிருக்கிறீர்? யார் இந்த நாட்டுக்கு ராஜா? நீங்களா நாபோத்தா? இதை என்னிடம் விட்டுவிடும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இனிமையாக பேசினாள். ஆகாபின் செவிகளில் அவள் வார்த்தைகள் தேனாய் பாய்ந்தது.  அவன் ஆசைப்பட்டது கிடைத்துவிடும்! அவன் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை!

இங்குதான் நாம் இன்று கவனிக்க வேண்டிய பாடம் உள்ளது! யேசபேல் எங்கு முதலில் ஆரம்பித்தாள் பாருங்கள்! முதலில் அவள் ஆகாபின் மனதை மாற்றுகிறாள்.

ஒருநிமிடம்  என்னோடு ஏதேனுக்கு வாருங்கள்! அங்கு வந்த வஞ்சகனுக்கு யேசபேல் என்ற பெயர் இல்லை, சர்ப்பம் என்ற பெயர் உள்ளது. அந்த சர்ப்பத்தின் தாக்குதல் அன்று அருமையான தேவனுடைய பிள்ளை ஒருத்தியைத்தான்.  எத்தனை இனிமையான வார்த்தைகளை சாத்தான் அவளிடம் பேசினான். அவள் மந்து மாறிப்போயிற்று!

யேசபேலுக்கு எச்சரிக்கையாயிருங்கள்! வெளிப்புறம் வேறு உருவத்தில் இருக்கலாம் ஆனால் உட்புற நோக்கமோ நம்மை ஏமாற்றி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதுதான். நம்முடைய மனதைத் திசை திருப்புவதே சாத்தானின் முதல் தாக்குதல்!

எத்தனைமுறை நான் யேசபேலுக்கு அல்லது சர்ப்பத்துக்கு என்னுடைய வாழ்வில் இடம் கொடுத்ததால் அவள் என்னுடைய மனதை திசை திருப்பி, நான் நினைத்ததை நான் அடைய முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறாள்!  அது ஏவாளின் முன்னால் இருந்த கனியோ, அல்லது ஆகாபின்  முன்னால் இருந்த திராட்சைத் தோட்டமோ, எதுவாயிருந்தாலும்  சரி, நாம் ஆசைப்பட்டதை அடைந்து விடலாம் என்ற எண்ணம் நமக்குள் சாத்தானால் வரும்போது நாமும் சோரம்போய் பாகாலை ஆராதிக்க ஆரம்பிக்கிறோம்!

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! பவுல்  கூறுகிறது போல

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்  (ரோமர் 12 : 2)

இதுவே நாம் ஒவ்வொருநாளும் செய்ய வேண்டிய புத்தியுள்ள ஆராதனை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment