Tamil Bible study

இதழ்:1787 உன் விசுவாசத்தில் கீறல் விழும்போது!

1 இராஜாக்கள் 19:1 -3 எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

 

யேசபேலைப்பற்றி சில நாட்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்!

இந்த வேதாகமப்பகுதி நமக்கு யேசபேலின் இன்னுமொரு தாக்குதலை தெளிவாகக் காட்டுகிறது! எலியாவின் கடந்த  வாழ்க்கை, ராஜாவால் மிகவும்  தேடப்பட்ட குற்றவாளியைப் போலவே இருந்தது. ஆகாபும், யேசபேலும் அவனுடைய தலைக்கு குறி வைத்திருந்தனர். ஆனால் தேவனாகியக் கர்த்தர் அவனை கேரீத்தண்டையிலும், சீதோன் நாட்டில் இருந்த சாறிபாத்திலும் வைத்து , காகத்தின் மூலமாகவும், ஏழை விதவையின் மூலமாகவும் போஷித்துக் காத்து வந்தார். எனக்கு இதை படிக்கும்போதெல்லாம், சங்கீதம் 91: 11, 15 தான் ஞாபகத்துக்கு வரும்.

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.


இந்த வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கும் சம்பவம் நடக்கும்போது கர்த்தர் எலியாவுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளை எதுவும் கொடுக்கவில்லை. ஆகாப் ராஜா கர்மேல் மேல் நடந்த எல்லா காரியங்களையும், வல்லமையான அக்கினி பலிபீடத்தை பட்சித்ததையும், எலியாவின் கட்டளை படி, பாகாலின் தீர்க்கதரிசிகள் அனைவரும் அன்று கொலை செய்யப்பட்டதையும், ஜனங்கள் அனைவரும் கர்த்தரே தேவன் என்று ஆரவாரமிட்டதையும் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தன் மனைவியாகிய யேசபேலிடம் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த எல்லாவற்றையும் கூறுகிறான். உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி நாளை உன் பிராணனை எடுத்துவிடுவேன் இது நிச்சயம் என்று மிரட்டுதல் செய்தியை அனுப்புகிறாள்.

இப்பொழுது நாம் எலியாவின் காலணிகளை அணிந்து பார்ப்போம்! அது அவனுடைய வாழ்வில் மிகப்பெரியதொரு நாளாக அமைந்து விட்டது!  எவ்வளவு பெரிய வல்லமையான காரியத்தை செயல் படுத்தியிருந்தான்.! இஸ்ரவேல் மக்களுக்குள்ளே வானத்தின் அக்கினையை பார்த்தபின் ஒரு எழுப்புதலே வந்து விட்டது. பாகாலுக்கு தலை பணிந்த அத்தனை பேரும், கர்த்தரே தேவன் என்று ஆர்ப்பரித்தது அவன் உள்ளத்தை பூரிக்கச் செய்தது! ஆனால் அவன் சரீரத்தை நார் நாராக கிழித்ததுபோல ஒரு களைப்பு, பசி வேறு வயிற்றை பிழிந்தெடுத்தது! ஆனாலும் அசைக்கமுடியாத விசுவாசத்தில் எலியா இரும்பு மனிதனாய் நின்றான். வானத்து அக்கினி அவன் ஜெபத்துக்கு பதிலாய் வந்தபின்னர், பெருமழை அவன் ஜெபத்துக்கு பதிலாய் வந்த பின்னர் இந்த மனிதனை விசுவாசத்தில் அசைக்க முடியுமா???

ஆனால் வேதம் கூறுகிறது எலியா யேசபேலின் அந்த மிரட்டுதலுக்கு பயந்து அங்கிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலை விட்டு, யூதாவை சேர்ந்த பெயர்செபாவுக்கு போனான் என்று.

யேசபேலுடைய நோக்கமே தேவனுடைய நாமத்தை இஸ்ரவேலிலிருந்து ஒழித்து விட வேண்டும் என்பதே! அதற்கு தடையாக இருப்பவன் இந்த எலியா ஒருவன் தான்!  ராஜபலம் அவள் பக்கம் இருக்கும் தைரியத்தில், இப்பொழுது அவள் எலியாவின் விசுவாசத்தை உடைக்கிறாள். 

யேசபேலின் முதல் தாக்குதல் ஒருவரின் உள்ளம் என்று பார்த்தோம். இரண்டாவது அவள் செய்த யாவும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல என்று நம்ப வைக்கிறாள். இதை செய்வதால் நீ ஒன்றும் கீழ்ப்படியாமல் போவதில்லை, நீ செய்வதெல்லாம் சரியே என்ற எண்ணம் நமக்குள் வர யேசபேலே காரணம். இன்று அவள்உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருந்த எலியாவின் விசுவாசத்தில் கீறல் போட்டு விட்டாள்!

விசுவாசத்தில் இரும்பு போல இருந்த எலியா யேசபேலின் மிரட்டுதலால் தன் பிராணன் காக்க ஓடினான் என்று வாசித்தபோது என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் எழுதலாம் என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கையிலும் யேசபேல் என் விசுவாசத்தை விழுங்கிய நாட்கள் உண்டு! நான் தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்தில் தளர்ந்து போன நாட்கள் உண்டு! அப்படிப்பட்ட நாட்களில், நான் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அவருடைய பிள்ளை, நான் அவருடைய  சாயலில் உருவானவள், அவருடைய ஆவியானவரால் முத்திரை போடப்பட்டவள் என்ற உண்மைகள் யாவுமே என் கண்கலிலிருந்து மறைந்து விடுகின்றன!

அப்படியானால் என்ன என்று யாராவது என்னிடம் கேட்பீர்களாகில், நான் யார்! நீங்கள் யார்! என்ற கேள்விக்கு பதில் இதோ! தேவன் நம்மை தம்முடைய சாயலில் உருவாக்கினார் என்று வேதம் கூறுகிறது. நான் அவருக்கு விசேஷமானவள் ஏனெனில் நான் அவருடைய சாயலைக் கொண்ட அவருடைய பிள்ளை. இதுவே என்னுடைய விசுவாசத்தின் அடிப்படை! நான் அவருடையவள் என்று முத்திரை பதிக்கப்பெற்றவள்!

அருமையான தேவனுடைய பிள்ளைகளே தேவனுடைய பார்வையில் நீங்கள் விசேஷித்தவர்களானால், உங்களைப்பற்றிய கவலை எதற்கு? நீங்கள் எப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவருடைய கண்கள் உங்கள் மேல் நோக்கமாயிருக்கிறது ஏனெனில் நீங்கள் அவருடைய பார்வையில் மிகவும் விசேஷித்தவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து போக வேண்டாம்! 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

Leave a comment