கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1788 அகந்தை உன்னை அழித்து விடும்!

2 இராஜாக்கள் 9:30 – 35 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து, யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்.
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
உள்ளேபோய், புசித்துக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

நம்மை சுற்றிலும் உள்ள பொல்லாப்பானவர்கள் செழித்து வாழ்வதைப் பார்க்கும்போது, கர்த்தர் ஏன் இவர்கள் மேல் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும்! ஆனால் அவர் என்றென்றுமே பொறுமையாக இருக்க மாட்டார்! ஆனால் வேதத்தின் கடைசி புத்தகம் கூறுவது போல நிச்சயமாக ஒருநாள் பொல்லாங்கன் அழிந்து போவான்! இது நிச்சயம்!

வேதத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் 12: 21 -23ல் கூறப்பட்ட சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது!

குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

என்னுடைய மதிப்பிற்குரிய பாஸ்டர் சுவிண்டோல் அவர்கள்,  ஏரோது அகிரிப்பா I குறித்து எழுதியதைப் பாருங்கள்;

யூத சரித்திர வல்லுநர் ஜொசிபஸ் இந்த சம்பவத்தைக் குறித்து எழுதியிருக்கிறார். இது நடந்த சமயத்தில் ஏரோது வெள்ளி ஜரிகை உள்ள வஸ்திரத்தை அணிந்திருந்தான். அந்தக் காலைவேளையில் சூரிய ஒளி அவனுடைய வஸ்திரத்தின் மேல் பட்டு ஜொலித்தது.அங்கு இந்த பூலோகத்தின் மகிமையில் நின்ற ஏரோதுவை மக்கள் கடவுளுக்கு ஒப்பிட்டனர். அவர்களுடைய புகழ்சியையும், வழிபாட்டையும் அவன் ஏற்றுக்கொண்டான், அதுவே அவனுடைய முடிவு!

இப்பொழுது இந்த பாகால் வழிபாட்டின் தேவதை யேசபேலின் முடிவைப் பாருங்கள். யேசபேல்  தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு……அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; என்று வேதம் கூறுகிறது.

அதன் பின்னர் எலியாவின் வார்த்தையின்படியே அவளுடைய இரத்தத்தை நாய்கள் நக்கி, மாம்சத்தை தின்றது. எவ்வளவு பளபளவென்று ஜொலித்த வாழ்வு இப்படி நாய்க்கு உணவாயிற்று.

எவ்வளவு இறுகிய மனப்பான்மை! கர்த்தருடைய சத்ததுக்கு செவிகொடுக்க மறுத்த மனம்! தேவன் அவளுடைய வாழ்வில் தன்னை நுழைத்துக்கொள்ளவா முடியும்? அவளுக்கு தன்னுடைய அக்கிரம வாழ்வை விட்டுக் கொடுக்க மனதேயில்லை! இந்த கொடிய மரணம் தேவனாகியக் கர்த்தர் அவளுக்குக் கொடுத்ததா? இல்லை! இது அவளே தனக்காக தேடிக் கொண்டது. அவள் தெரிந்து கொண்ட பாதை, எடுத்த முடிவுகள், அவளுடைய நடத்தை எல்லாமே தேவனுக்கு விரோதமாகவே இருந்தது. கடைசியில் அவளை அழிவுக்குள் இழுத்து சென்றது.

ரஜாவாகிய சாலமோன் பலதடவைகளில் தவறான வழியை தெரிந்து கொண்டதால் அதின் விளைவுகளை நன்கு அறிந்து, இவ்வாறு எழுதுகிறான்;தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. (நீதிமொழிகள் 16 : 17 – 18)

நீ இன்று எந்த பாதையை தெரிந்து கொண்டிருக்கிறாய்? மனமேட்டிமை உன்னை அழிவுக்கு கொண்டு செல்லும்! உன் அகந்தையை விட்டு மனந்திரும்பு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment