1 இராஜாக்கள் 18:41 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
யாக்கோபு 5:17,18 எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
கர்த்தராகிய இயேசுவின் அப்போஸ்தலனாகிய யாக்கோபுக்காக இந்த வேளையில் நன்றி செலுத்த வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் அவர்தான் நமக்கு ஜெபவீரனாகிய எலியா நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்று நம்மை எலியாவோடு சம்பந்தப்படுத்தி பேசியவர். எலியா ஒரு அசாதாரண மனிதன் அல்ல! ஒரு பரிபூரணர் அல்ல!
எலியாவைப்பற்றி தொடர்ந்து ஒருசில நாட்கள் நாம் படிக்கும்போது எலியாவின் வாழ்வின் கடைசி முனைக்கே தள்ளிய சவால்களைப் பார்க்கப்போகிறோம். நம்மைப் போன்ற ஒரு மனிதன்! அவனுடைய ஆவிக்குரிய வாழ்வை மட்டுமல்ல, சரீரத்தையும், உணர்ச்சிகளையும் பெலவீனப்படுத்திய காரியங்கள்! தன்னால் முடிந்த அளவுக்கு தேவனுக்காகாக தன்னையே எரித்துக்கொண்ட ஒரு ஒளி வீசிய வாழ்க்கை! தன்னால் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட போதும் தன் பரம தகப்பனின் கரத்தை பற்றிக் கொண்டிருந்த வாழ்க்கை!
யாக்கோபு கூறும் விதமாக எலியா ஒரு ஜெப வீரன் தான் ஆனால் அவனுடைய ஜெபங்கள் ஒன்றும் அவன் விரும்பிய அளவுக்கு உடனே பதிலக்கப்படவில்லை. ஆனால் அந்தத் தாமதம் எதுவும் அவனுடைய ஜெபத்தை நிறுத்தவேயில்லை!
நாம் எல்லோருமே வாழ்வின் எல்லைக்கே தள்ளப்படும்போது, கர்த்தர் நம்முடைய பெருமூச்சின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கமல் இருக்கிறார் என்று தோன்றும்போது, கேட்கிற ஒரே ஒரு கேள்வி துதான் என்று நினைக்கிறேன்! ஆண்டவரே ஏன் என்னை இந்தப் புயலில் சிக்க வைத்தீர்? ஏன் என்னை இந்த சிக்கலான வேளையில் கை விட்டீர்?
உங்களில் அநேகர் இன்று இப்படிப்பட்ட சூழலில் இருக்கிறீர்கள் என்று அறிவேன்! தனிமையாக, கைவிடப்பட்ட நிலையில், வாழ்வின் எல்லைக்கே தள்ளப்பட்ட நிலை! வாழ்வில் நீ சந்திக்கிற யுத்தங்கள் உன்னை பெலவீனப்படுத்தி விட்டது! நீ காயப்பட்டு, கசங்கி, சுருங்கி நிற்கிற வேளை இது!
கர்த்தருடைய வார்த்தைகள் இன்று நமக்கு இரண்டு முக்கியமான வகையில் நம்மை வந்தடைவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! தேவனாகிய கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் வாக்கு மாறாது என்பது எலியாவின் வாழ்க்கை மூலமாக நமக்கு தெரிய வருகிறது! அவன் மழைக்காக ஜெபித்தபோது, அதற்குரிய எந்த அடையாளமும் காணப்படாத வேளையிலும், பெருமழை பெய்யும் என்று அவன் விசுவாசித்தான். கர்த்தர் பெருமழையை அனுப்பினார்!
நாம் வேதத்தில் காணும் எத்தனையோ பேரைப்பற்றி இங்கு பல வருடங்களாக படிக்கிறோம். ஆனால் எலியா மட்டுமே நம்மைப்போல பல பாடுகளை அனுபவித்தவன். இப்படிப்பட்ட மனிதர்கள் மூலம் நம்முடைய விசுவாசத்தை தேவன் நிலை நிறுத்த உதவுகிறார். எலியாவை போஷித்த தேவன், எலியாவை காத்து பராமரித்த தேவன், எலியாவின் ஜெபத்தைக் கேட்ட தேவன் இன்று நமக்கும் இரங்குவார் என்ற நிச்சயம் வருகிறது.
இன்று உன் ஜெபம் கேட்கப்படாமல் இருக்குமானால், உனக்கு வாக்குக் கொடுத்தவர் வாக்கு மாறாதவர் என்ற உண்மையை ஏற்று இளைப்பாறு! சமீபமாக எலியாவின் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து படித்தபோது, நமக்கு சுதந்தரமாக தேவனை ஆராதிக்க கற்றுக் கொடுத்த மார்ட்டின் லூத்தர் அவர்களைப்பற்றி படிக்க நேரிட்டது. அவரும் எலியாவைப்போல தன்னுடைய விசுவாசத்திற்காக போராடியவர். எலியாவைப்போல அவருடைய வாழ்வின் எல்லைக்கே தள்ளப்பட்டவர். அவர் எந்த வேளையில் தனக்கு என்ன நேரிடுமோ என்று வாழ்ந்த போது, இவ்வாறு ஜெபித்ததைப் பார்த்தேன்.
எனக்கு உறுதியான அசைக்க முடியாத விசுவாசம் இல்லை ஆண்டவரே; உம்மை முற்றிலும் விசுவாசிக்க எனக்கு பெலனும் இல்லை! என் தேவனே உம்மை உறுதியாய் விசுவாசிக்கவும், உம்மை முழுவதுமாய் நம்பி வாழவும் எனக்கு பெலன் தாரும்!
இன்று ஒருவேளை இது உன்னுடைய ஜெபமாகவும் இருக்கலாம்! நாம் தேவனுடைய கரத்தை இறுகப்பற்றிக் கொண்டு பவுல் 1 தெசலோனியர் 5:24 ல் கூறியதை விசுவாசிப்போம்.
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
