கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1791 என்னிடம் வா! இளைப்பாறுதல் தருவேன்!

1 இராஜாக்கள் 19:5-7  ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.
அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.

தசை நாரெல்லாம் வலிக்கிறது என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். சில நேரங்களில் அதிக வேலையினாலும், பயணங்களாலும் அப்படிப்பட்ட வலி எனக்குக்கூட வருவது உண்டு! சில நேரங்களில் இப்படி ஒவ்வொருநாளும் நாம் வாழ முடியாது என்று சில வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுண்டு!

எலியாவின் கடினமான உழைப்புக்கு பின், சரீர களைப்போடு சேர்ந்து, பயமும், மனச்சோர்பும் பற்றிக்கொண்டன.

முதலில் எலியா , ராணியாகிய  யேசபேலின் மிரட்டுதலைக் கேட்டு தன்னுடைய உயிருக்காக பயந்தான் என்பது உண்மை. அதுமட்டுமல்ல! அவனுக்கு வந்த மனச்சோர்பின் இன்னொரு காரணம் இஸ்ரவேல் மக்களின் வெதுவெதுப்பான எழுப்புதல் என்று சொல்லலாம். அந்த மலையின் மேல் வானத்தின் அக்கினியைக் கண்டபோது வந்த எழுப்புதல் சற்றுநேரத்தில் குறைந்து விட்டது. அது ஒரு உணர்ச்சிவசமான எழுப்புதல் தான்.

தொடர்ந்து பயமும், மனச்சோர்பும் அவன் உள்ளத்தை பலமாகத் தாக்கியதால் அவன் பலனற்றவனாய் சூரைச்செடியின் கீழ்ப் படுத்துக் கொண்டு நித்திரை செய்தான். நம்முடைய மிகப்பெரிய ஹீரோவான மோசே கர்த்தரிடம் இந்த மக்களை இனித் தன்னால் வழி நடத்த முடியாது என்று கெஞ்சியவிதமாக, யோபு எல்லாவற்றையும் இழந்த பின்னர் தன்னால் இனி வாழ முடியாது என்று சொன்னது போல, தாவீது சங்கீதத்தில்  வாழ்க்கை பிரயோஜனமில்லை என்று புலம்பியது போல, நீயும் நானும் ஒவ்வொரு நாட்கள் புலம்புவது போல எலியாவும் மனம் தொய்ந்து போனான். நம்மில் பலரும்  கூட எத்தனை தடவை, ஐயோ இராத்திரி தூங்கிவிட்டு காலையில் எழும்பாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மன வேதனையில் இருந்திருக்கிறோம் அல்லவா?

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, தேவனாகியக் கர்த்தர் எலியாவோடு எந்த பேச்சு வார்த்தையும் செய்யும் முன்னர் ஒரு தேவ தூதனை அனுப்பி அவனுக்கு உதவினார். அவனுடைய உடனடி தேவை உணவும், தண்ணீரும், சரீரத்துக்குத் தேவையான நல்ல உறக்கமும் தான். இரண்டுமுறை தேவ தூதன அவனுக்கு தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் வைத்து அவனை உண்டு இளைப்பாறும்படி செய்த்தர்.

அந்த சூரைச்செடியின் நிழலில் எலியாவின் சரீரப்பிரகாரமான தேவையானது எல்லா ஆவிக்குரிய தேவைகளைப் பார்க்கிலும் மேன்பட்டிருந்தது. எத்தனை மைல் தூரங்கள் அவன் வெறும் காலில், உணவு தண்ணீரன்றி பிரயாணித்தான்! அந்த காலத்தில் வழியிலெல்லாம் உணவகங்கள் இருந்தனவா என்ன?  அவன் உடல் சோர்வினாலும், மன சோர்வினாலும் மரணத்தை தழுவ விரும்பியபோது தேவன் அவனுடைய சரீர பெலத்தை உணவினாலும், உறக்கத்தாலும் புதுப்பித்தார்.

ஆம்!  நாம் நம்முடைய சரீரத்தை சரிவர கவனிக்காமல் ஓடிக்கொண்டிருப்போமானால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதற்கு தீர்க்கதரிசியான எலியாவே சாட்சி!

மனம் சோர்ந்து உள்ளாயா? கர்த்தராகிய இயேசு இன்று உன்னை அழைக்கிறார். அவரிடம் வருபவர்களுக்கு இளைப்பாறுதல் தருவார்!

அதுமட்டுமல்ல உன்னுடைய அரீரத்திற்கும் தேவையான இளைப்பாறுதலை கொடுக்க தவறிவிடாதே! ஆவி உற்சாகமாக இருந்தாலும் சரீரம் பெலவீனபட்டிருந்தால் உன்னால் தேவனிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது! சரியான சத்துள்ள ஆகாரமும், போதிய நித்திரையுமே உன்னை புதுப்பிக்கும்! அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் வேதத்திலிருந்து ஜீவ அப்பத்தினாலும் உன்னை திருப்தி படுத்து!

சற்று இளைப்பாறு! எல்லாம் சரியாகிவிடும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment