1 இராஜாக்கள் 19:8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்.
சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
இந்த சஙீதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! பூமியே அதிர்ந்தாலும், தண்ணீர் புரண்டு வந்தாலும், நம்முடைய தேவன் நமக்கு அளிக்கும் பெலன் அற்புதமானது! புயலடிக்கும் வாழ்விலும் எதிர்த்து போராட அவர் பெலன் தருவார் என்ற நிச்சயத்தைக் கொடுக்கும் சங்கீதம்!
சங்கீதம் 46 ந் கடைசியில் இந்த வசனமும் உள்ளது
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சங்கீதம் 46 : 11)
இந்த சங்கீதத்தை பின்னணியாக வைத்து, நாம் எலியாவை சந்திக்கப் போகலாம். அவன் இந்நேரம் அயர்ந்த நித்திரையிலிருந்து எழும்பியிருப்பான்! அவனுக்கு இரண்டு வேளை நல்ல சத்துள்ள ஆகாரம் தேவ தூதன் அவர்களால் கொடுக்கப்பட்டது. அவனை நன்றாக தூங்கவும் விட்டு விட்டார் அவர். எலியாவுக்கு புது பெலன் வந்துவிட்டது. அந்த இளைப்பாறுதலின் பெலத்தால் எலியா அடுத்த பிரயாணத்துக்கு ஆயத்தமாகிவிட்டான். அந்த புது பெலத்தால் அவன் நாற்பது நாட்கள் இரவும் பகலும் நடந்து ஓரேப் பர்வதம் சென்றடைந்து வ்ட்டான்!
உங்களை சிரிக்க வைக்க இதை எழுதவில்லை! ஆனால் உண்மையில் இதை வாசிக்கும்போது அப்படி என்ன சூப்பர் பவர் அந்த உணவு கொடுத்தது என்று யோசித்தேன்! அது 40 நாட்கள் தாங்கியது என்றால் சூப்பர் பவர் ஆகாரம் தானே! இந்த ஆகாரத்தை மட்டும் நம்முடைய வியாபார வர்த்தகங்கள் கண்டு பிடித்து விட்டால்????? நாற்பது நாட்கள் நீங்கள் வேறு எந்த உணவையும் உண்ண வேண்டாம், இது மட்டுமே போதும் என்று கூவியே சம்பாதித்து விடுவார்கள்!!!!!
அது எப்படிப்பட்ட உணவாகவோ இருந்து விட்டு போகிறது, அவன் யெஸ்ரயேலிலிருந்து ஓடி வரும்போது தன் சுய முடிவால் செய்த பிரயாணத்துக்கும், இப்பொழுது கர்த்தருடைய பர்வதம் என்று அழைக்கப்படும் ஓரேப் பர்வதத்திற்கு தேவனுடைய வழிநடத்துதால் செய்த பிரயாணத்திற்கும் அதிக வித்தியாசம் இருந்தது. இப்பொழுது அவன் தேவ பெலத்தினால் நடக்கிறான்!
இந்த இடத்தில் எனக்கு மோசேயினுடைய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன!
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான். (உபாகமம் 33 : 25)
மோசே இந்த வார்த்தைகளை பேசியபோது இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து முடிந்து விட்டது. கிட்டத்தட்ட அவர்களுடைய தலைமுறையினர் அனைவருமே மரித்துப் போயினர். இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தின் எல்லையில் பாளயமிறங்கியிருந்தனர்.மோசே 120 வயதுள்ளவன், அவனுடைய கண் பார்வை குறையவேயில்லை, குரல் கணீரென்று இருந்தது. அவன் இஸ்ரவேல் மக்களை தேவன் வகுத்த பாதையில் நெறி தவறாமல் நடக்கும்படி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வேளையில் அவன் அவர்களிடம் கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை, உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்.
இன்று காலையில் எழும்பும் போது எனக்கு ஒன்றும் பெரிய பெலன் இல்லை என்பது எனக்குத் தெரியும்! நான் தனிப்பட்ட நேரம் தேவனோடு செலவிடுவது உண்டு. ஒவ்வொருநாளும் நான்உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்ற வார்த்தைகளை சொல்லி ஜெபிப்பது உண்டு! நாளுக்கு நாள் நான் தேவ பெலத்தை அதிகமாக அனுபவித்தும் வருகிறேன்.
தேவனுடைய ஆராதனை வேளைகளில், ஆசாரியர் தங்கள் குரல்களை உயர்த்திப் பாடிய சங்கீதம்தான் 46 வது சங்கீதம். தேவன் நம்முடைய அடைக்கலம், பெலன், ஆபத்துக்காலத்தில் நம் துணையானவர், அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பதை நாமும் உணர்ந்து அவரை ஆராதிப்போம்!
எலியா தேவ பெலனோடு ஓரேப் பர்வதம் நோக்கி நடந்தவாறு நாமும் ஒவ்வொருநாளும் தேவ பெலத்தால் நம் வாழ்வைத் தொடருவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
