1 இராஜாக்கள் 19:9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
எலியாவுக்கு ஒரு நீண்ட பிரயாணம் இது! நாற்பது நாட்கள் இராப்பகலாய் நடந்தான்! ஓரேப் பர்வதத்தில் ஏறிய அவனுக்கு ஒரு குகை கண்களில் பட்டது! அங்கே தங்க அவன் முடிவு செய்தான்!
எபிரேய மொழியில் இந்த வார்த்தை தங்கினான் என்பதின் அர்த்தத்தை இன்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன், ஏனெனில் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன!
முதலில் அதன் அர்த்தம் என்னவெனில் , ‘இராத்தங்குதல்’ என்பது. இது அவன் ‘நிரந்தரமாக தங்குதல்’ என்றும் அர்த்தம் உள்ளது. யாருக்குத் தெரியும் எலியாவின் எண்ணம்? அவன் கிலேயாத் மலையில் முரட்டுத்தனமாய் வளர்ந்தவன் அல்லவா? ஒரேபின் குகை தங்குவதற்கு ஒன்றும் மோசமானது இல்லை என்ரு முடிவு செய்திருக்கலாம்! நிச்சயமாக இது யேசபேலின் பிடியில் சிக்காத ஒரு இடம்!
இந்த வார்த்தைக்கு இன்னும் ஒரு அர்த்தமும் உள்ளது. அது ‘பிடிவாதத்தோடு தங்குதல்’ என்பது ஆகும். இது நம்முடைய எலியாவின் குணம் அல்லவே அல்ல! ஆனால் நாம் வாசித்த வேத வசனத்திற்கு அடுத்த வசனம் சொல்கிறது,
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். (1 இராஜாக்கள் 19 : 10) என்று.
அப்படியானால் எலியா மிகவும் மனத்தாங்கலோடுதான் இருக்கிறான் என்றுதானே அர்த்தம். அவன் வார்த்தைகளே இதை வெளிப்படுத்துகிறது அல்லவா? என்னைக் கேட்டால் நான் நிச்சயமாக எலியா மீது மிகுந்த அனுதாபம் தா எனக்கு வரும்! இஸ்ரவேல் மக்கள் தேவனை மறந்து பாகாலிடம் தங்களை விற்று விட்டனர்! எலியா தனி மனிதனாக நின்று பாகாலுக்கு தலை வணங்காமல் தேவனுடைய நாமத்தை கர்மேல் பர்வதத்தின் மேல் மகிமைப்படுத்தினான். அவனுடைய தலைக்கு மேல் கத்தி நின்ற வேளையிலும் அவன் கோழைத்தனமாக பேசவேயில்லை! நாம் அவன் மீது பழி சுமத்தவே முடியாது.
கொடியதான கரடுமுரடான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கும் வேளை ஒரு குகையைக் கண்டவுடன் அதில் தங்காமல் தொடர்ந்து கரடுமுரடான பாதையில் நடக்கும் கிறிஸ்தவர்களை நான் பார்த்ததேயில்லை!
விசுவாசத்தில் மலை போன்ற எலியா, பாகாலின் தீர்க்கதரிசிகளை வெட்டி சாய்த்த எலியா இப்பொழுது ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான்! அங்கே கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி அவர் , எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
என்ன ஆச்சரியம்! இந்தக் குரல் அவனுக்கு மிகவும் பரிச்சயமானதுதானே! அவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து அவன் எங்கெல்லாம் போயிருக்கிறான்.இப்பொழுது இந்த மலையில் உள்ள இருளான குகையில் கர்த்தர் அவனுடன் பேசி தான் தன் நண்பனும், ஊழியக்காரனுமாகிய எலியாவைக் கைவிட்டு விடவில்லை, அவனோடு இந்தக் குகையிலும் இருப்பதைத் தெளிவு படுத்துகிறார்!
இங்கு எலியா தனியாக கர்த்தருடன் இருக்கிறான்! அவனுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் கர்த்தர் அவனோடு அடிக்கடி பேசிய அந்த அனுபவம் அவனுக்கு மறுபடியும் தேவைப்பட்டது.
இன்று நீயும் ஏதோ ஒரு கெபியில், இருளான இடத்தில், எதிர்காலமே இருண்டு போய், என்ன அடுத்தது என்று அறியாத நிலையில் இருப்பாயானால், எலியாவோடு கெபிக்குள் இருந்த தேவன் உன்னோடும் இருக்கிறார் என்பதை மறந்து போகாதே!
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபிரேயர் 13 : 5)
அவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார்! எலியாவின் வாழ்வின் அனுபவம் இன்று உன்னுடையதாகட்டும்! மனம் சோர்ந்த வேளையிலும் உன்னைக் கைவிடாத தேவன் உன்னோடிருப்பதை மறந்து விடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
