கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1814 உன் நடத்தைக்கு சுண்ணாம்பு அடித்து மறைக்காதே!

சங்:51:2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இதைத்தான் நாம் சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம்.

நாத்தான் தாவீதின் பாவத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை நாடினான் என்று பார்த்தோம். அவரோ அவனை பாதைத் தவறிப் போன ஒரு குழந்தையாகப் பார்த்தார்!

தாவீது தான் செய்த மகா பயங்கர செயலை உணர்ந்தவுடன் தன்னுடைய அரண்மனையில் அவனுக்கு ஆலோசனை சொல்ல இருந்த அநேக ஞானிகளைத் தேடாமல் தன்னுடைய முகத்தை தேவனாகிய கர்த்தரிடமாக நோக்கினான். தேவனுடைய மிகுந்த இரக்கத்தை நாடியபின் அவரிடம் தன்னை சுத்திகரிக்க வேண்டுமாறு கெஞ்சுகிறான்.

தாவீது கர்த்தரிடம் கூறிய என்னைமுற்றிலும் கழுவி என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் வேரோடு அறுத்து எறிதல், அழித்துவிடுதல், அல்லது அறுத்து எடுத்தல் என்று பல அர்த்தங்கள் உண்டு!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த வார்த்தைகள் எனக்கு இன்று  புது அர்த்தத்தைக் கொடுத்தன!  முதலில் தாவீது தன்னை எந்த சூழ்நிலையிலும் தள்ளிவிடாத ஒரே ஒருவர் உண்டு என்று அறிந்து அவரிடம் செல்கிறான். அங்கு கர்த்தர் அவனை ஏற்றுக்கொள்கிறார் ஏனெனில் அவர் தாவீதை தன்னுடைய பிள்ளையாகப் பார்த்தார்.

பின்னர் தாவீது தேவனை நோக்கி,  அவனோ அல்லது வேறு யாருமோ அவனுக்காக செய்ய முடியாத இன்னொன்றையும் கேட்கிறான். கர்த்தரிடம் தன்னை சுத்திகரிக்கும்படி வேண்டுகிறான். தன்னுடைய உள்ளத்தில் வேர் கொண்டிருந்த பாவத்தை வேரோடு அறுத்து எறியும்படி கேட்டான்!

எங்களது காப்பி தோட்டத்தில் மிகப்பெரிய வேலையே களை எடுப்பதுதான். மழை காலத்தில் மிக வேகமாக பாறைக்குள் களைகள் வளர்ந்து விடும்! ஏதாவது காரணத்தால் கொஞ்சம் களை எடுக்க தவறி விட்டால் காப்பி செடிகளை நெருக்கிவிடும்.

தாவீது தன்னுடைய பரம தகப்பனை நோக்கி தன்னுடைய வாழ்க்கையில் வளர்ந்திருக்கும் களைகளை முற்றிலும் வேரோடு நீக்கி தன்னை சுத்திகரிக்கும்படி வேண்டுகிறான்!

தாவீது இப்படியாக ஜெபித்த போது கர்த்தர் அவனை எப்படி பார்த்திருப்பார் என்று சற்று யோசித்தேன்!

கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்?  1. முதலாவது அவன் கர்த்தருடைய பிள்ளை

2. இரண்டாவது அவன் கர்த்தரிடம் தன்னுடைய இருதயத்தை முற்றிலும் சுத்திகரிக்க வேண்டுகிறான்.

அவன் கர்த்தரிடம் கண் கட்டி விளையாடவில்லை. தன்னுடைய நடத்தைக்கு சுண்ணாம்பு அடித்து மறைக்கவில்லை. தன்னுடைய உள்ளத்தைத் திறந்து அதில் முளைத்திருக்கும் களைகளை அறுத்து எறிய சொல்கிறான்.

கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார் என்பதற்கு வேறு விளக்கம் வேண்டுமா?

இன்று நீ ஏன் தயங்குகிறாய்? கர்த்தரை நோக்கி தாவீதைப் போல

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும் என்று ஜெபி! தாமதியாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment