கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1816 உம்முடைய நாமத்துக்கு கேடு விளைவித்த பிள்ளை நான்!

சங்: 51:4  தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.  .

தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்? என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம்.  இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே அந்த உரியாவுக்கு விரோதமாக ஒன்றுமே செய்யவில்லையா? அவனுடைய குடும்பத்தார் எப்படி? அவர்களுக்கு விரோதமாக அவன் ஒன்றும் செய்ய வில்லையா? என்று நினைக்கத்தான் தோன்றியது.

தாவீது தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன் என்று சொல்லும்போது அவன் பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் விரோதமாக நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவில்லை! அவன் அவர்களுக்கு கொடுத்த வலியை நன்கு அறிவான்!

2 சாமுவேல் 12:13 ல் தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனுடைய பாவத்தை தெளிவாக கூறியபோது, அவன் நாத்தானிடத்தில் நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்றான் என்று பார்க்கிறோம்.  தாவீது அப்படி சொன்னதின் அர்த்தம் என்னவெனில், நான் தேவனை விட்டு அவருடைய சமுகத்தை விட்டு விலகி தூரமாய் சென்று விட்டேன், என்னுடைய சுயமான வழியில் நடந்து விட்டேன் என்றுதான்.

பாவம் என்பது நாம் தேவனாகிய கர்த்தரை விட்டு பிரிந்து, தூரமாய்  வாழ்வதுதான். தாவீது இதை நன்கு உணர்ந்தான். கர்த்தரோடு தான் கொண்டிருந்த உறவைப் புதுப்பிக்கும் வரை தன்னால் கண்ணாடி போல நொறுக்கப்பட்ட எந்த உறவையும் புதுப்பிக்க முடியாது என்றும் உணர்ந்தான். தாவீது கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ததை உணர்ந்தவுடன் தன்னுடைய மற்ற உறவுகளையும் குணமாக்க கர்த்தருடைய உதவியைத் தேடினான்.

அதுமட்டுமல்ல! தாவீது  நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும் நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் என்கிறான்.

வேதத்தில் சில பகுதிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமலே வேகமாக கடந்து விடுவொம். இந்தப் பகுதியும் அப்படிப்பட்டது தான். இன்று நான் இதை எழுதும் போது பலமுறை படித்தும் அர்த்தம் விளங்கவே இல்லை. கடைசியாகத்தான் தலைக்குள் பல்ப் எரிந்த மாதிரி அர்த்தம் புலப்பட்டது.

தாவீது தன்னுடைய தகப்பனாகிய  கர்த்தரை நோக்கி , என்னுடைய வழக்கு நிச்சயமாக உம் முன்னால் வரும்! நான் உமக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேன், அதனால் என்னை மன்னித்து, கழுவி, சுத்திகரியும்! ஏனெனில் நீர் என்னை உம்முடைய இருதயத்திற்கேற்றவன் என்று சொல்லி, என்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினீர்.  என்னுடைய வழித்தவறிப்போன நடத்தையால் உம்முடைய நாமத்துக்கு கேடு பண்ணி விட்டேன். நான் உமக்கு விரோதமாக, ஆம் தேவரீர் உமக்கே விரோதமாக இப்படி செய்து விட்டேன். நான் உம்முடைய பிள்ளை!  என் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப்பட வேண்டும், உம்முடைய பரிசுத்தம் விளங்க வேண்டும்! என்று கெஞ்சுகிறான்.

மறுபடியும் சொல்கிறேன்! இதனால் தான் தேவனாகிய கர்த்தர் தாவீதை மிகவும் நேசித்தார்!

வழிதப்பிப்போன இந்தக் குமாரனிடம் தன்னுடைய தகப்பன் பெயரைக் கெடுத்து விட்டோமே, அவருடைய மகிமையை பங்கப்படுத்திவிட்டோமே என்ற குமுறல் காணப்பட்டது.

இன்று நம்முடைய வாழ்க்கையில் உள்ள எந்தப் பாவமானாலும் சரி, சிறியதோ, பெரியதோ, அது தேவனுடைய மகிமையை அழித்துவிடும்! அவருடைய நாமத்தை தூஷிக்கும் விதமாக எதையும் செய்யாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment