1 பேதுரு 2 : 11பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
நாம் எலியாவின் வாழ்க்கையைப் பற்றியும் அவனுடைய வாழ்வில் ஏற்பட்ட மிகபெரிய சவால்களையும் பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது, எலியா எவ்வளவுதூரம் தேவனுடைய சித்தத்தை தன்னுடைய வாழ்வில் நிறைவேற்றினான் என்ற உண்மை என்னை திகைக்க வைத்தது. கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு வந்தபோது உடனே அவன் புறப்படுவதையும், அதன்படி செயல்படுவதையும் பார்க்கும் போது அவன் இந்த உலகத்தை தனக்கு சொந்தமாக நினைக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
இன்றைக்கு எலியாவின் வாழ்விலும், எலியாவைப்போல தேவனுடைய சித்தத்தின்படி வாழும் அநேக தேவனுடைய பிள்ளைகளின் வாழ்விலும் நான் கண்ட விசேஷமான குணங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.
1. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அவருடைய கரத்தின் வழி நடத்துதலுக்கு கீழ்ப்படிய காத்திருப்போர். எலியாவின் வாழ்க்கையில் ஐந்து இடங்களில் கர்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி அவனுடைய அடுத்த கட்டத்திற்கு அவனை வழி நடத்திற்று. எப்படி கர்த்தருடைய வார்த்தை அவனிடம் வந்தது? அவன் கர்த்தருக்கு செவி சாய்க்க தன் வாழ்க்கையில் நேரத்தை ஒதுக்கியிருந்தான். இன்று நம்மால் கர்த்தரின் சத்தத்தை கேட்க முடிகிறதா?
2. அவர்கள் இந்த உலகம் ஒரு கடந்து போகும் இடம் என்பதை உணர்ந்திருந்தார்கள். இது நிரந்தரம் இல்லை. நாம் ஒரு முகாமில் தங்குவது போன்றதுதான் இந்த வாழ்க்கை! நிச்சயமாக முகாம் வாழ்க்கையை நாம் யாரும் நிரந்தரமாக்க முயல மாட்டோம் அல்லவா?
3. அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்தபோதும் பரலோக சிந்தனை கொண்டவர்கள். எனக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய இந்த வார்த்தைகள் மிகவும் பிடித்தவை.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாகஅவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1 : 3- 4 ).
நம்முடைய அழியாத சுதந்தரம் பரலோகம்தான் என்பதை மறவாமல் வாழும் வாழ்க்கை.
4.அவர்கள் இந்த பூமியில் கிடைக்கும் மகிமையை இலக்காக வைக்காமல் பரலோகத்தின் மகிமையை இலக்காக வைத்து ஓடுபவர்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு மடல் எழுதிய போது அவன் இருளான, தனிமையான சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் அந்த சூழலில் எழுதுவதப் பாருங்கள்!
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலிப்பியர் 3 : 13 – 14)
நம்முடைய பந்தயப் பொருள் பரலோகத்தில் உள்ளது! பூமியில் அல்ல!
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! அழிந்து போகும் இந்த வாழ்க்கைக்காக பாடு படாமல் அழியாத ஜீவனுள்ள வாழ்வை ஒவ்வொருநாளும் நாம் தேடி வாழும்போது இந்த உலகமும் அதின் மகிமையும் நமக்கு சொந்தமல்ல, நாம் இங்கு அந்நியரும் பரதேகளுமே என்பதை உணருவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
