1 இராஜாக்கள் 19:10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்ற எலியாவின் வார்த்தைகள் என்னை இன்றைய தியானத்தை எழுத வைத்தன.
திருமணம் ஆனவர்களோ அல்லது திருமணம் ஆகதவர்களோ, கூட்டத்தில் இருப்பவர்களோ அல்லது இரளான தனி அறியில் இருப்பவர்களோ எல்லோருமையே தனிமை என்னும் வெறுமை விரட்ட வல்லது என்று நினைக்கிறேன்.
நம்முடைய வாழ்வின் சந்தோஷமே மற்றவர் நம்மை ஏற்றுக் கொள்வதும், நாம் செய்யும் காரியங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதும், துணை நிற்பதுமே! இவை நாம் உண்ணும் உணவுக்கு சமம்! நம் வாழ்வில் உள்ள அநேகர் இதை புரிந்து கொள்வதே இல்லை. அதனால் தான் அநேகர் குடிப்பழக்கத்துக்குள் போகிறதுண்டு.நம் குடும்பத்தில் நாமே முக்கியமானவர்கள் என்று மற்ற குடும்பத்தினர் அங்கீகாரம் பண்ண வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.
எலியா நம்மெல்லோரையும் விட தேவனை அதிகமாக அறிந்தவன், தேவனுடைய பலத்த கிரியைகளுக்கு அவன் ஒரு சாட்சி, அவனுடைய தனிமையில் அவனுக்கு துணையாக இருந்த தேவனோடு பேசி உறவாடியவன். அப்படிப்பட்ட ஒருவ யெசெபேலுக்கு பயந்து ஓரேபுக்கு ஓடும்போது அவன் வாழ்வின் உறுதுணையானவரிடம் நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்பதை பார்க்கிறோம்.
எலியா நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்ற வாசகத்தில் உள்ள நான், என் என்ற வார்த்தைகளைப் பாருங்கள்.நாம் நம்மேல் அதிகமாக கவனத்தை செலுத்தும்போது வரக்கூடிய நான் நான் நான் என்ற நோய் இது.நான், என் என்று நாம் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நம் உலகம் மிகவும் குறுகி விடுகிறது. தேவனாகிய கர்த்தர் அவனிடம் நீ மாத்திரம் தனியாக இல்லை எலியா,
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்( 1 இராஜாக்கள் 19 : 18)
இந்த எண்ணிக்கை எலியாவுக்கு மிகப்பெரிய ஒன்று என எண்ணிய தேவன் அவனுக்கு ஒரு நல்ல நட்பை அவனுடைய வாழ்வில் அவன் பெறும்படி வழி திறக்கிறார். எலிசா அவன் வாழ்வில் வந்த பின்னர் அவன் வாழ்வு முற்றிலும் மாறியது.
ஒருவேளை நீயும் இன்று எலியாவைப்போல தனிமையாக இருப்பதாக உணரலாம். இந்தக் குடும்பத்தில் நான் மட்டும் தனியாக உள்ளேன், எனக்கு உறுதுணையாக யாருமே இல்லை, என்னைப் புரிந்து கொள்வார் யாருமில்லை என்று நினைத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது சிலர் நான் செய்யும் வேலையில் என்னை புரிந்து கொள்வார் யாரும் இல்லை, எனக்கு துணை நிற்போர் இல்லாமல் தனிமையில் இருக்கிறேன் என்று நினைக்கலாம்.
நண்பர்களே! ஒருவேளை தேவன் உனக்காக ஒரு விசித்திரமான நட்பை அல்லது துணையை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். ஒரு நட்பு உன் வாழ்வை மாற்றக்கூடியதாய் அமையப்போகிறது! அந்த ஒரு நட்பு உனக்கு ஒரு பாலமாக அமையப்போகிறது!
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2 : 18
முதன் முதலில் தேவன் நல்லதல்ல என்று சொன்ன காரியமே தனிமைதான்! உனக்காக ஒரு நல்ல துணையை, நட்பை ஏற்படுத்துவார்! பயப்படாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
