என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
சங்கீதம் 84 : 2
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
2 இராஜாக்கள் 2 : 9
எலியா, எலிசா இருவரும் நடந்து யோர்தானின் கரைக்கு வந்தனர். யோர்தானின் தண்ணீர் இரண்டாய் பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் இருவருடைய பிரயாணம் முடிவுக்கு வந்து விட்டது.
அப்பொழுது எலியா எலிசாவிடம் நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான்.
எலிசா என்ற உத்தமான ஊழியன் தன்னுடைய மானசீக தலைவனும், நண்பனுமாகிய எலியாவிடம் துணிந்து ஒரு கேள்வி கேட்கிறான். உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
எலிசாவின் முன்னே எலியா திறந்த வாசலைக் காட்டியவுடன், எலிசா உடனே அதை உபயோகப்படுத்தி தனக்கு இரட்டிப்பான வரத்தை வேண்டுகிறான். ஆனால் இந்த வரத்தை எலியாவால் கொடுக்க முடியுமா? இதை தேவன் அல்லவா செய்ய வேண்டும். ஆனால் எலியா இத்தனை வருடங்கள் இந்த உத்தம நண்பனோடு செலவிட்டதில், அவனுக்கு நன்கு தெரியும் எலிசா தன்னுடைய விசுவாசத்தை பயிற்சிக்கும் இந்த வரத்தைத் தான் கேட்பான் என்று.
இளைஞனான எலிசா கேட்ட இந்த வரத்தில் பெரிய காரியம் அடங்கியிருக்கிறது. நாம் சற்று நிதானமாக அதை தியானிப்போம்.
எலியாவும் எலிசாவும் சேர்ந்து ஊழியம் செய்த வருடங்கள் 13வருடங்கள் என்று தெரிய வருகிறது, அப்படியானால் இருவரும் 4745 நாட்கள் இந்த இருவரும் ஒன்றாக வாழ்ந்து ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருந்திருப்பார்கள். எலிசா திறமையோடு தன்னுடைய பணிகளை, ஊழியங்களை நிறைவேற்றியதை எலிசா மனநிறைவோடு கவனித்து வந்திருப்பான். எலியாவோடு அவன் கடைசிவரை நிலைத்திருந்த அந்த மேலான தன்மையை நாம் கவனிக்க மறந்து விடக் கூடாது.இந்த பின்னணியில் எலியாவுக்கு நன்கு தெரியும் எலிசா தன்னை மேன்மைப்படுத்தும் எந்த வரத்தையும் நாட மாட்டான், தன்னுடைய விசுவாசத்தை நிலைப்படுத்தும், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வரத்தைதான் நாடுவான் என்று.
இன்று எனக்கு இப்படிப்பட்ட தருணம் கொடுக்கப்படுமாகில் நான் என்ன வரத்தைக் கேட்பேன் என்று நினைத்துப் பார்த்தேன். நான் நினைத்தது நடக்க, நான் வேண்டியவைகளைப் பெற வரத்தைக் கேட்டிருப்பேனோ? அல்லது எலிசாவைப் போல தேவனுடைய ஊழியத்தை செய்ய இரட்டிப்பான வரத்தைக் கேட்டிருப்பேனோ என்று யோசித்துப் பார்த்தேன்.
எலிசா கேட்ட இந்த வரம் அவன் தன்னுடைய சொந்த பெலத்தால் எலியாவுடைய ஊழியத்தைத் தன்னால் செய்ய முடியாது, தேவனுடைய கிருபை தனக்குத் தேவை என்று எலிசா உணர்ந்ததையே வெளிப்படுத்துகிறது. எலிசா இதை தன்னால் செய்ய முடியாது என்று கைகளை உதறிவிடாமல், தன்னுடைய ஆன்மீக பயிற்சியாளர் எலியா ஒவ்வொருமுறையும் சென்ற அதே இடத்தில் தனக்கு உதவியை நாடுகிறான்.
தேவன் அழைத்த எந்தப் பணிக்கும் உன்னைத் தகுதிப்படுத்தாமல் அழைத்திருக்க மாட்டார். இன்று நாம் எலிசாவைப் போல, ஆண்டவரே உம்முடைய பிள்ளையாகிய என்மேல் இரட்டிப்பான ஆவியை ஊற்றும், நான் நீர் விரும்பும் விதமாக இந்த பூமியில் வாழ என்னைத் தகுதிப்படுத்தும் என்று ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
