கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1846 கலங்காதே! எல்லாம் நன்மைக்கேதுவாகவே முடியும்!

உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.

இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை நான் சென்னையில் வாழ்ந்த பொழுது, எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிடுவது உண்டு! சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்! ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல் காற்று கடலிலிருந்து வீசும்போது சென்னைவாசிகளாகிய நாங்கள் அதை அனுபவிக்கும் சுகமே தனிவிதம் தான்.

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இருப்புக்காளவாய் போன்ற அனுபவங்கள் நம்மில் அநேகருக்கு உண்டு. எங்கள் குடும்பத்திலும் சூறாவளி, பூகம்பம், அக்கினி போன்ற அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட அனுபவங்களை கடந்து கொண்டிருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளான உங்களில் அநேகருக்கு இன்று வாசிக்கிற இந்த வசனம் சில்லென்று வருகின்ற ஒரு பூங்காற்றைப் போல இருக்கும்.

தொடர்ந்து அக்கினி போன்ற துன்பத்துக்குள் கடந்து வரும் சில தேவனுடைய பிள்ளைகளைப் பார்த்து கடவுள் ஏன் இவர்களை இப்படித் தண்டிக்கிறார்? என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்களோ கர்த்தருடைய அளவுகடந்த கிருபையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தருடைய அன்பின் இனிமையை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

நீதிமான்களுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்:34:19).

இருப்புக்காளவாய் உன்னை பயமுறுத்தலாம்! ஆனால் எரிக்க முடியாது! சாத்தான் உன்னை அதற்குள்ளே தள்ளலாம், ஆனால் கர்த்தர் நம்மை அங்கிருந்து புறப்படப்பண்ணுவார் என்று வேதத்தில் பார்க்கிறோம். புறப்படப்பண்ணுவார் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ’சுமப்பார்’ என்ற ஒரு அர்த்தம் உண்டு. நாம் இருப்புகாளவாய்க்குள் விழுந்து விடாதபடி அவர் நம்மைத் தூக்கி சுமப்பார்! .அல்லேலூயா!

நாங்கள் அக்கினியைக் கடந்தபோது கர்த்தர் எங்களோடு இருப்புக்காளவாயில் இருந்ததை உணர முடிந்தது. எங்களோடு அக்கினியின் மத்தியில் உலாவினார் ஒவ்வொவொரு நாளும் அவர் எங்களோடு முகமுகமாய் வேதத்தின் மூலம் பேசி வழிநடத்தியதையும், எங்களை வெளியே சுமந்து கொண்டு வந்ததையும் வார்த்தைகளால் விளக்க முடியாது. உபா: 4:20 ல் சொல்லப்பட்டவிதமாக, “தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்” என்ற வாக்கியத்துக்கு நாங்களே ஜீவனுள்ள சாட்சிகள்!

கர்த்தர் ஏன் இருப்புக்காளவாய் போன்ற அனுபவங்களை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார்? என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்!  நம்மை இஸ்ரவேல் மக்களைப் போல அவருக்கு சுதந்தரமான ஜனமாகவும், பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாகவும், தெரிந்து கொண்டதால்தான் இந்த அனுபவங்கள். அவருக்காக சாட்சியாக, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ இவை உதவுகின்றன. சாத்தான் எங்களையும் எங்கள் ஊழியத்தையும் அழித்துவிட நினைத்தான் ஆனால் வெற்றி பெறமுடியவில்லை! அவன் கர்த்தர் மேல் எங்களுகிருந்த வாஞ்சையை அழித்துவிட நினைத்தான், ஆனால் கர்த்தரோ எங்களோடிருந்து தம் அன்பை வெளிப்படுத்தியதால் நாங்கள் அவரை அதிகமாக நேசித்தோம்!

அன்பின் தேவனுடைய பிள்ளையே! கர்த்தர் உன்னை இருப்புக்காளவாய் அனுபவத்தின்மூலமாக, துன்பத்தில் வாடும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும், ஜெபிக்கும், ஊழியத்துக்காக உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கலாம்!!

பின்வரும் வரிகளை சிந்தித்துப்பார்! நம்மைப்போன்ற மற்ற விசுவாசிகளின் அனுபவங்கள் இவை! நீ கலங்காதே! எல்லாம் நன்மைக்கேதுவாகவே முடியும்.

கர்த்தரிடம் நான் மலர்களைக் கேட்டேன், கர்த்தரோ முள்ளுள்ள கத்தாழையைக் கொடுத்தார்!

கர்த்தரிடம் வண்ணத்துபூச்சிகளைக் கேட்டேன், கர்த்தரோ அருவருப்பான புழுக்களைக் கொடுத்தார்!

நான் துக்கத்தில் அழுதேன்! புரண்டேன்! கர்த்தர் என்னை நேசிக்கவில்லையோ என்று கதறினேன்!

பலநாட்களுக்கு பின்னர் ஒருநாள்,

முள்ளுள்ள கத்தாழையில் மலர்களைக் கண்டேன்! எத்தனை அருமை!

அருவருப்பாயிருந்த புழுக்கள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி என்னை சுற்றிவந்தன!

என் நேசரின் வழி மாறாக இருந்தாலும், அவர் எனக்கு நன்மையையே நினைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Follow us on Twitter @rajavinmalargal

 

Leave a comment