தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1851 வண்டு தொட்டு சென்றாலே தேன் கிடைக்குமா?

உபா:28:9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

 நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு!

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள் என்ற பட்டியலில் இருந்தனர். இந்த வெளிப்படை அடையாளங்கள் எல்லாம் ஒருவரை பரிசுத்தராக்க முடியாது என்ற பேருண்மையை, நான் பரிசுத்தவான்கள்  என்று எண்ணிய சிலருடைய பரிசுத்தமில்லாத செயல்களைப் பார்த்தபின்னர் தெரிந்து கொண்டேன்.

பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு என்னால் அர்த்தத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரிசுத்தம் என்றால் என்ன?

நமக்கு பதில் நாம் படித்துக்கொண்டிருக்கிற உபாகமம் புத்தகத்திலிருந்து கிடைக்கிறது. கர்த்தர் மோசேயின் மூலமாக தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் படிக்கும்போது, இன்றைய வேத வசனத்தில், கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது, உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் என்று வாசிக்கிறோம். நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, பரிசுத்தராய் வாழ வேண்டும் என்பது அவருடைய ஆவல்.

இன்றைய வேதாகம பகுதியில் உள்ள முக்கியமான வார்த்தைகளை அதன் எபிரேய மொழியாக்கத்தில் பார்ப்போம். முதலில் நிலைப்படுத்துவார் என்ற வார்த்தையை கவனியுங்கள். நிலைப்படுதல் என்பது நிலைத்திருத்தல் என்று அர்த்தமாம். கர்த்தராகிய இயேசு சொன்னார்,” என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்என்று (யோவா:15:4) அப்படியானால் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள் என்று அர்த்தம்! ”உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்” (சங்கீ: 91:1) பரிசுத்தவான்கள் என்பவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள், ஒரே வீட்டில் குடியிருப்பவர்களைப் போல கர்த்தருடைய நிழலிலே தங்குபவர்கள்.

இரண்டாவதாக கைகொண்டு என்ற வார்த்தையைப் பாருங்கள். ஆங்கிலத்தில் keep  என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் பின்பற்றுதல், பாதுகாத்தல், கவனித்தல் போன்ற பல அர்த்தங்கள் உள்ள வார்த்தை அதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கூர்ந்து கவனித்து பின்பற்றி நடக்கும்போது, அவை நம்மை பாதுகாக்கும். எப்படிபட்ட பாதுகாப்பு தெரியுமா? நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விழுந்துவிட்ட ஒருவனை மூழ்கிவிடாமல் பாதுகாப்பது போலத்தான்!

மூன்றாவதாக  நடக்கும்போது என்ற வார்த்தையை கவனியுங்கள்! இதற்கு எபிரேய மொழியில் வளருதல் என்ற அர்த்தம் உள்ள வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியானால் இன்று வாசித்த வசனம் நமக்கு என்ன கற்பிக்கிறது? கர்த்தருக்கு பரிசுத்த ஜனங்கள் என்பவர்கள் கர்த்தருடைய வசனங்களால் தம்மை பாதுகாத்துக் கொள்ளுபவர்கள், கர்த்தருடைய வார்த்தைகள் மூலம் அவருடைய வழிகளில் வளருபவர்கள். அவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள், கர்த்தரும் தம்முடைய பரிசுத்த ஜனங்களிடம் வந்து வாசம் செய்வார் என்பதே!

 தேவனுடைய பிள்ளைகளே! வெண்மையான் வஸ்திரமோ, யாரிடமும் பேசி சிரிக்காத நீண்ட முகமோ, நாம் செல்லும் ஆலயமோ, அல்லது ஆலயத்தில் நாம் செய்யும் சேவையோ நம்மை பரிசுத்தவான்களாக்கிவிடாது.

ஒரு வண்டு மலரைத் தொட்டுவிட்டு சென்றால் அதனால் தேன் எடுக்க முடியுமா? அந்த மலரின் மேல் அதிக நேரம் தங்கியிருந்தால் தானே அதிலிருந்து தேனை உறிய முடியும். அப்படித்தான் நம் வாழ்க்கையும். எவ்வளவு நேரம் நாம் கர்த்தருடைய வார்த்தைகளில் தரித்திருக்கிறோமோ அவ்வளவு தூரம் அது நம்மை பரிசுத்தப்படுத்தும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Follow us on Twitter @rajavinmalargal

Leave a comment