குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1852. நீயும் சுகந்த வாசனை பெறுவாய்!

உபாகமம்: 28:10  அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.

நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பை தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம், வேலையை சரியாக செய்துவிடுவோம். வகுப்பிலும் அவர்களுடைய பாராட்டுதல் என்பது எங்களுக்கு தேன் குடித்த மாதிரி இருக்கும், அவர்களுடைய எதிர்பார்ப்பு எங்கள் தகுதிக்கு மேலாக இருந்தாலும் அதை கஷ்டப்பட்டு செய்து முடித்து விடுவோம்.

இன்றைய ’ஆசீர்வாதங்கள் என்ற பட்டியலில் நாம் பார்க்கும் வேத வார்த்தை, கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள், என்று சொல்லுகிறது!

முதலில் வாசிக்கும்போது இது கொஞ்சம் பயமாகவே இருந்தது. உங்களைக் கண்டவுடன், நீங்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை உணரும் மக்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்றால் பயமாக இல்லையா? சிலநேரம் ஒருசிலரைக் கண்டு நான் கூட ஓடியிருக்கிறேன், ஏனெனில் அவர்களுக்கு வார்த்தைகளால் மற்றவர்களை கொல்லும் சக்தி அதிகம்! மற்றவர்களுடைய குற்றங்களை பகிங்கரமாக பட்டி மன்றம் போட்டு பேசுவார்கள்! அப்படிபட்டவர்களுக்குத்தான் பயந்து ஓடுவேன்.

ஆனால் இந்த வசனத்தின்படி கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்டவர்களாகிய நம்மைக் கண்டு ஏன் பயம்? இது நமக்கு கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதம். நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் இருக்கும்போது நாம் உலகத்தாரோடு கொள்ளும் தொடர்பை இது காட்டுகிறது. கர்த்தர் நம் மேல் காட்டுகிற அளவில்லாத கிருபையினாலே, நாம் இரக்கத்தையும், பரிவையும், அன்பையும் மற்றவர்களிடம் காட்டுகிறோம். கண்ணாடியைப் போல அவருடைய அன்பை பிரதிபலிக்கிறோம். இதன் விளைவு என்ன? பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, நமக்கு பயப்படுவார்கள்.

பூமியின் ஜனங்களெல்லாம் உனக்கு பயப்படுவார்கள் என்ற வார்த்தை எபிரேய மொழியில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள்! பூமியின் ஜனங்களெல்லாரும் உன்னைக் கண்டு, பயத்தோடு மரியாதை செலுத்தி, உன்னை கனம் பண்ணுவார்கள் என்று. ஏன் கனம் பண்ணுவார்கள்? இரக்கமில்லாத மக்களை நாம் நம் வாழ்க்கையில் கடந்து வரும்போது கூட நம்முடைய தேவனாகிய கர்த்தர் தகுதியில்லாத நம்மேல் காட்டிய கிருபையையும் இரக்கத்தையும் பிரதிபலிக்கிறோம்! இதில் ஆச்சரியமேயில்லை! நம்முடைய எல்லா பெலவீனங்களுக்கு மத்தியிலும் கர்த்தர் தம்முடைய அன்பை ஊடுருவ செய்து மற்றவர்களையும் அதை அடைய செய்கிறார்.

நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நாம் பயந்து, அவருக்கு கனத்தையும் மகிமையையும் கொடுத்து நாம் வாழும்போது, அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் பூமியின் ஜனங்கள் முன்பு கனமும் மரியாதையும் உண்டு!

தமிழில் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கிறீர்களா? கிருபையும், இரக்கமும், கனமும் , மகிமையும், மகத்துவமும் பொருந்திய தேவாதி தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய சுகந்த வாசனையை , உலகத்தாருக்கு நம்முடைய சாட்சியினாலும், பரிவினாலும், இரக்கத்தாலும் பரவச்செய்ய வேண்டும் அல்லவா? அவ்வாறு செய்யும்போது நீயும் சுகந்த வாசனை பெறுவாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment