கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1875 புதைந்திருக்கும் உன் விசுவாசம் ஒருநாள் வைரமாகும்!

யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானைக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் போலும் என்று நினைத்தேன்!

இந்த இரண்டு வாரங்கள் ராகாபைப் பற்றி எழுதிய பின்னர் நான் ராகாபின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட மாபெரும் காரியம் என்ன என்ற  கேள்வி எனக்குள் எழும்பிற்று!

இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் அவள் வீட்டுக்குள் வந்தபோது, ராகாப் அவர்களிடம் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதைக் கேள்விபட்டேன் என்கிறாள்! இந்த சம்பவம் நடந்து  நாற்பது ஆண்டுகள்  ஆகியிருக்கும். ஏனெனில் இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பின்னர் இப்பொழுது அவர்கள் மறுபடியும் கானான் அண்டை வந்திருக்கின்றனர்.  நிச்சயமாக இது அவளுடைய தலைமுறையில் நடந்தது அல்ல! அவளுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டது தான்! கர்த்தர் சிவந்த சமுத்திரத்தை பிளந்த சம்பவம் அறைய கால கட்டத்தில் எல்லா நாட்டினராலும் பேசப்பட்ட ஒரு சம்பவமாயிருந்திருக்கும். ராகாப்  தன்னுடைய தாயினிடமோ அல்லது தாத்தாவிடமோ கேட்டு அறிந்த சம்பவம்தான் இது.

ராகாப் முந்தைய தலைமுறையினரிடமிருந்து கேள்விப்பட்டதையும், தன்னுடைய தலைமுறையில் இஸ்ரவேல் மக்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கூர்ந்து கவனித்தாள்! இஸ்ரவேலின் தேவனே வானத்துக்கும், பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் என்ற முடிவுக்கு வந்தாள்!

எத்தனை வருடங்கள் இந்தக் கதையை மறுபடியும் மறுபடியும் கேட்டிருப்பாள், அதைப்பற்றி சிந்தித்திருப்பாள்! கூண்டுப்பறவையாய், வேசி என்ற பட்டப்பெயரோடு வாழ்ந்த அவள் மனது எத்தனை நாட்கள் இந்தக் கர்த்தர் தன் வாழ்வில் கிரியை செய்ய மாட்டாரா என்று ஏங்கியிருக்கும்!

தேவனாகிய கர்த்தர் ராகாபின் சொந்த வாழ்க்கையில் கிரியை செய்ய அவள் பொறுமையோடு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது! திடீரென்று ஒருநாள் எதிர்பாராத வேளையில் தேவனாகிய கர்த்தர் அவளிடம் கிரியை செய்து கொண்டிருப்பது வெளிப்பட்டது. சிவப்பு நூல் கயிற்றின் மூலம் இரட்சிப்பு கிடைத்தது.

கர்த்தர் உன் வாழ்வில் கிரியை செய்வதைக் காண, உன்னை வழிநடத்துவதைக் காண, உனக்காக யுத்தம் பண்ணுவதைக் காண நீயும் ராகாபைப் போல பொறுமையோடு காத்திரு! என்று என் உள்மனம் என்னிடம் கூறிற்று! பலவிதமான சோதனைகள் வந்தாலும், உன்னுடைய சூழ்நிலைகள் உனக்கு எதிரே இருந்தாலும், கலப்பையில் வைத்த கையை எடுக்காதே! இறுதிவரை விசுவாசத்தைப் பற்றிக் கொள்!

ராகாபின் சரித்திரத்தை படித்து முடிக்கும்போது அவள் வாழ்க்கையிலிருந்து என்ன அருமையான ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்!

நாம் ராகாபின் சரித்திரத்திலிருந்து கடந்து இஸ்ரவேல் மக்களோடு கானானுக்குள் செல்லும்போது, ராகாப் நம்மிடம் ‘ என் பிள்ளைகளே பொறுமையோடு காத்திருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் அறிவேன்! அவரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்! அவருக்காக காத்திருப்பதால் நீங்கள் குறைவுபடுவதில்லை! என்று கூறுவது என் செவிகளில் விழுகிறது!

பல ஆயிரம் வருடங்கள் பூமிக்குள் பொறுமையாய் கிடக்கும் நிலக்கரி ஒருநாள் வைரமாய் ஜொலிப்பதில்லையா? ராகாபைப் போல பொறுமையாய்க் காத்திரு! உன் விசுவாசமும் ஒருநாள் வைரம் போலாகும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Follow us on Facebook and Twitter@rajavinmalargal

Leave a comment