கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1887 அன்றைய இன்றைய தலைமுறையினர் செல்லும் ஒரே பாதை!

நியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை;  அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால், கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார்.

காலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர்.

பின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள் நியாயம் தீர்த்த காலத்தில் கர்த்தரை பின்பற்றிய இஸ்ரவேல் மக்கள், தெபொராளின் மரணத்துக்கு பின்னர் பின்வாங்கினர்.

நாம் கிதியோனைப் பற்றி வாசிக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் மீதியானியருக்கு பயந்து மலைகளின் குகைகளில் வாழத் தொடங்கினர். இம்மட்டும் வழிநடத்தின தேவனை மறந்து போய் விட்டனர். கிதியோனின் தலமையில் மீதியானியரை முறியடித்த பின்னர் மறுபடியும் அவர்கள் பின்வாங்கி போயினர். கிதியோனும் கூட புறஜாதியானைப் போல பல பெண்களை மணந்து வாழ்க்கை நடத்தியதைப் பார்க்கிறோம்.

நியாதிபதிகள் முழுவதும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை நிலையில்லாமல் மேலும் கீழும் இருப்பதைப் பார்க்கிறோம்.

நியாதிபதிகளின் முதலாம் வசனத்தில் (நியா: 1: 1 )எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்பட வேண்டும்  என்று கேட்டர்கள், என்றும், நியாதிபதிகளின் கடைசி வசனத்தில் (நியா:21 : 25) , அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான் என்றும் பார்க்கிறோம். அது ஒரு “என் இஷ்டப்படிதான் நான் வாழுவேன், நான் சொல்வதும், செய்வதும் தான் சரி ” என்ற தலைமுறை என்று நினைக்கிறேன். அவரவர் விரும்பினதை செய்து, மனம் போன போக்கிலே வாழ்ந்த காலம் அது!

சரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.

இதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், அன்றைய தலைமுறையினரும், இன்றைய தலைமுறையினரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். எல்லோரையும் போல நான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர்.

இந்த புதிய ஆண்டிலே நாம் நியாதிபதிகள் புத்தகத்தைப் படிக்கும்போது, வேதத்தில் நம்முடைய அடுத்த பிரயாணம் என்னவெனில், நாம் தேவனுடைய சித்தத்தை செய்கிறவர்களாக இருக்க வேண்டும், நம்முடைய சித்தத்தை அல்ல.

நம்முடைய மனம் போன போக்கிலே வாழாமல், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் மூலமாக எதை நிறைவேற்ற சித்தம் கொண்டிருக்கிறாறோ அவ்விதமாக நம்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். தேவனாகிய கர்த்தர் நம்மை கரம் பிடித்து வழி நடத்துவார்.

என் சித்தமல்ல, உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்!

என் ஆசைகள் அல்ல, உந்தன் ஆவி என்னை வழிநடத்தட்டும்!

நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் ஜீவிப்பதை

உலகத்தார் காணும் மட்டும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment