கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1908 சிறிய பொறுப்பையும் அலட்சியப்படுத்தாதே!

நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

நான் பாத்திரங்கள் கழுவ இயந்திரத்தை உபயோகப்படுத்துவது வழக்கம். இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய பாத்திரங்களை துடைத்து வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே அடுக்குவார்கள்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கு பாத்திரம் விளக்கச் சொல்லிக் கொடுத்த போது, ஒரு சாப்பிடுகிற தட்டைக் காண்பித்து, இதில் ஒட்டிக்கொண்டிருக்கிற உணவு நாம் சரியாகக் கழுவாவிட்டால் அப்படியே காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். ஒருவேளை நம் வீட்டுக்கு யாராவது சாப்பிட வந்து, நாம் இந்தத் தட்டில் சாப்பாடு பரிமாரினால், காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் சாப்பாட்டைப் பார்த்துவிட்டு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!  என்று சரியாக விளக்காதற்காக என்னைத் திட்டாமல், நேர்த்தியாக செய்வதே சரியான செயல் என்று புரிய வைத்தார்கள்.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் அந்த எண்ணம் மிகவும் குறைவு பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒருமுறை என்னுடைய கார் , சர்வீஸ் ஸ்டேஷன் போய்விட்டு வந்தபோது, நான் சொல்லியனுப்பிய குறை சரியாக கவனிக்கப்படாமல் இருந்தது மட்டுமல்ல, காரின் முன் பகுதியில் கருப்பான கையச்சுகளோடு வந்தது! அதைப்பார்த்தவுடன் எத்தனை அலட்சியமாக வேலை செய்துள்ளனர் என எரிச்சல் தான் வந்தது.

நல்லவேளை! என்னைப் பொறுத்தவரை எதை செய்தாலும் நேர்த்தியாக செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்த அம்மா எனக்கு அன்று கிடைத்தார்கள்! எதையும் நேர்த்தியாக செய்த தெபோராளின் வாழ்க்கை உதாரணமாக இன்று கிடைத்திருக்கிறது!

நீதிமொழிகள்: 22: 29 எனக்கு பிடித்தமான வசனம்.  ” தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.”   

இந்த வாசகத்தின் அர்த்தம்,  தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் தனக்குக் கொடுக்கப்படும் எந்தப் பொறுப்பையும் கவனமாக செய்வான் என்பது மட்டும் பொருளல்ல! அவன் தன் வாழ்க்கை மீது மட்டும் அக்கரை காட்டாமல் மற்றவர்கள் வாழ்க்கை மீதும் அக்கரை காட்டுபவன் என்றுதான் அர்த்தம். மற்றவர்கள் மேலும் சற்று அக்கரை இருக்குமானால், நாம் செய்யும் எந்த வேலையும் மிகுந்த ஜாகிரதையோடே செய்வோம்.

இதை நான் தெபோராளின் வாழ்க்கையில் பார்க்கிறேன். தெபோராள் மற்றவர்களின் வாழ்க்கை மேல் அக்கரை கொண்ட ஒரு பெண் என்பதற்கு,  வேதம் , அவளை  ஒரு மனைவி என்றும்,  ஒரு தீர்க்கதரிசி என்றும்,, ஒரு நியாதிபதி என்றும் கூறுவதே சாட்சி.

ஒரு மனைவியாகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை மிகுந்த ஜாக்கிரதையோடு செய்ததால், அவளைக் கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு நியாதிபதியாகவும் அழைத்தார்!

சகோதரனே, சகோதரியே, உன்னுடைய குடும்ப பொறுப்பை எவ்வாறு நிறைவேறுகிறாய்?

உனக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பை அலட்சியப்படுத்தாமல், மிகுந்த ஜாக்கிரதையோடு, உன்னை சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கரையோடு , நேர்த்தியாக செயல் படும்போது , கர்த்தர் உன்னை இன்னும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார் என்பதில் சந்தேகமேயில்லை.

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment