கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1935 துருத்தியில் வைக்கப்படும் உன் கண்ணீர்!

நியாதிபதிகள்: 11:38  “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,”

என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத் தான். அழ ஒரு காலமுண்டென்றால், நகைக்கவும் ஒரு காலமுண்டு!

அதுமட்டுமல்ல! சாலொமோன் ராஜா, பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். அவருடைய தகப்பனாகிய தாவீது, இதைப்பற்றிக் கூறும்போது, “உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” (சங்: 37:18) கர்த்தர் என்னுடைய நாட்களை அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் எத்தனை ஆறுதலைத் தருகிறது. அந்த நாட்களை நான் வீணாக்காமல் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற வாழுவேனால் எத்தனை மகிழ்ச்சி!

சாலொமோனின் வார்த்தைகளின் படி அழ ஒரு நேரமுண்டு என்பது எத்தனை உண்மை. அழக்கூடாது என்று நம்முடைய இருதயத்தை சுற்றி இரும்புத்திரையை நாம் போட்டாலும், பல நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் பெருக்கெடுத்து விடுகிறது அல்லவா? தாவீது ராஜாவைப் போல, “ என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” ( சங்: 56:8) என்று  கதறிய நாட்களும் உண்டு, என்னை சுற்றியுள்ளவர்கள் படும் வேதனையைக் கண்டு கண்ணீர் விட்ட நாட்களும் உண்டு.

இங்கு யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளோடு நகைக்க செல்லவில்லை. அது அவளுடைய வாழ்க்கையின் புலம்பலின் நேரம், அழுகையின் நேரம். அவள் இழந்து போன வாழ்க்கைக்காக துக்கித்த நேரம். அவள் தோழிகள் அவளோடு சேர்ந்து கண்ணீர் விட ஆயத்தமாக இருந்தனர்.

சில நேரங்களில் நாம்  இழந்துபோனதை நினைத்து கண்ணீர் தான் வரும் அல்லவா? அந்த வேளைகளில்  கண்ணீர் நிச்சயமாக நமுடைய  சூழ்நிலையை மாற்றா விட்டாலும், அது நம்முடைய இருதயங்களை இணைக்க வல்லது!

உன்னுடைய வாழ்க்கையில் ஒருவேளை நீ அழுகையின் நேரத்தை, புலம்பலின் நேரத்தை கடந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பரமபிதா நம்முடைய கண்ணீரை அறிந்திருக்கிறார். அவைகள் அவருடைய துருத்தியில் சேர்க்கப்படுகின்றன! சீக்கிரம், வெகு சீக்கிரம் அவருடைய கரம் உன்னுடைய கண்ணீரைத்  துடைக்கும்!

உன் தலையணை நனையும்படி நீ விட்ட கண்ணீரை அவர் அறிவார்!

செங்கடலை இரண்டாய்ப் பிளந்த தேவனுடைய கரம் உன் கண்ணீரைத் துடைக்கும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment