கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1937 கீழ் நோக்கி செல்லும் பயணமா?

நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.

ஒருமுறை  முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றோம்.

சற்று நேரத்தில் எங்களுக்கு முன்னால் சென்ற அந்த பேருந்து, பிடுங்கி எரியப்பட்ட பொம்மை போல,  கீழே சறுக்கி விழுந்து கிடந்ததைக் கண்டோம். பேருந்திலிருந்து மக்களின் ஓலம் காற்றைக் கிழித்து வந்தது. சுற்றிலுமிருந்த ஜனங்கள் பஸ்ஸின் ஜன்னல்களை உடைத்து மக்களை வெளியே கொண்டு வந்தனர். மழை பெய்து ஈரமாயிருந்த சாலையில் திடீரென்று பிரேக்கை அழுத்தியதால், மழுங்கிப்போயிருந்த பேருந்தின் டயர்கள் வழுக்கி  பஸ் சரிந்து விட்டது.

அப்படிப்பட்ட பழைய  பேருந்தை ஓட்டிய டிரைவர் எவ்வளவு ஜாக்கிரதையாக ஓட்டியிருக்க வேண்டும். அதற்கு மாராக எங்களைப் போன்ற கார்களுக்கு வழிவிடாமல்  போட்டி போட்டு ஓட்டிக் கொண்டிருந்தான்! அதனால் வரும் விளைவை அவன் உணரும் முன்னால் பஸ் சருக்கி விட்டது.

இப்படி சாலைகளில் கார்களும், பஸ்களும், மோட்டார் வாகனங்களும் சறுக்கி விழுவது நம் வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் நாம் சறுக்கி விழுந்தால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான்.

நாம் வேதத்தில், நியாதிபதிகளின் புத்தகத்திலிருந்து, பல நாட்கள் யெப்தாவின் மகளின் வாழ்க்கையை ஆராய்ந்தோம். நாம் படிக்க வேண்டிய அடுத்த நபர் சிம்சோன் என்று எனக்கு நன்கு தெரியும். நான் முதலில் இந்த 12 ம் அதிகாரத்தை விட்டு விடலாம் என்று யோசித்தேன். ஏனெனில் முதல் ஏழு வசனங்கள் யெப்தா நியாதிபதியாக இஸ்ரவேலை ஆண்டதைக் கூறுகிறது. இரத்த வெறி பிடித்த ஆட்சி அது.

ஆனால் 12:8 ல் ஒரு புது நியாதிபதியைப் பற்றி பார்க்கிறோம். அவன் பெயர் இப்சான். நான் வேதத்தை மறுபடியும் ஒருமுறை வாசித்தபோது இந்த மனிதனைப்பற்றிப் படித்தேன். நமக்கு ஏதோ ஒரு பாடம் கற்பிக்கவே வேதத்தில் இவர்களுடைய பெயர்களும், வாழ்க்கையும் இடம் பெற்றுள்ளன என்று எனக்கு திட்டமாகத் தெரியும். அதனால் இந்த இப்சானைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, இப்சான் ஏழு வருஷம் நியாயம் தீர்த்தான், அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான் என்று.

அப்படியானால் அவனுக்கு அநேக மனைவிமார் இருந்திருக்கக் கூடும். நினைத்த நேரத்தில் புது மனைவியை எடுப்பது தேவனின் அநாதி தீர்மானத்தில் இல்லை என்று நமக்குத் தெரியும். அடுத்தாற்போல் அவன் புறஜாதியில் பெண் எடுத்து, பெண் கொடுத்தான் என்று பார்க்கிறோம். ஒருவேளை இஸ்ரவேலை சூழ்ந்த புறஜாதி கோத்திரங்களைத் தன்னுடைய கரத்துக்குள் வைப்பதற்காக இதை செய்திருக்கலாம், ஆனால் இதை தேவன் விரும்பவில்லை என்றும் நமக்குத் தெரியும்.

மக்களுக்கு முன் மாதிரியாக, சாட்சியாக, முன்னோடியாக வாழவேண்டியத் தலைவர்கள், தவறான வாழ்க்கை நடத்தினர். இதனால் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத் தரம் சறுக்க ஆரம்பித்தது. இன்று நம் சபை போதகர் ஒருவர், பத்து மனைவிகளை மணந்து, தன்னுடைய பிள்ளைகளை புற மதத்தினருக்கு திருமணம் செய்து கொடுத்து, சபையை சமாதானத்தில் வளர்க்கிறேன் என்று சொன்னால் அந்த சபை எப்படியிருக்கும்?

இன்று உன் வாழ்க்கையை நீ சிந்தித்துப் பார்! நீ செய்யும் காரியம், நீ வாழும் வாழ்க்கை உன் ஆவிக்குரிய வாழ்க்கையையும், உன் குடும்பத்தையும் வளரச் செய்கிறதா அல்லது சறுக்கி விடுகிறதா?

ஒரு தவறான அடி அடுத்த தவறான அடிக்கு நம்மை நடத்துகிறது அல்லவா? நாம் நம்முடைய நிலையை உணருமுன்னர் அது நம்மை சறுக்கி விழ வைக்கிறது. 

சில நேரங்களில் நாம் செய்த தவறை உணர்ந்தாலும், கீழ்நோக்கிய சரிவை தடுக்கவே முடியாது, ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment