கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1938 விசாலமான வாசல் கேட்டுக்குள் வழி நடத்தும்!

நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம்.

ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.

சிம்சோனின் கதையை முதன்முதலில் நான் ஆழ்ந்து படித்தபோது கர்த்தர் கொடுத்த பெருந்திறமைகளை வீணடித்த ஒரு மனிதன் இவன் என்றுதான் நினைத்தேன். சிம்சோனின் வாழ்க்கையே வீணானது என்று நான் சொல்லவில்லை. இந்த பூமியில் வாழும் எந்த மனிதனின் வாழ்க்கையும் வீணானது அல்ல. ஆனால் நாம் எப்படி வாழத் தெரிந்து கொள்ளுகிறோமோ அதைப் பொருத்ததுதான்! ஒருவேளை சிம்சோன் தன் வாழ்க்கை முழுவதும் தேவனின் சித்தப்படி வாழத் தெரிந்து கொண்டிருப்பானால் அவனுடைய குடும்பத்தின் சரித்திரம் மட்டும் அல்ல, இஸ்ரவேலின் சரித்திரமே மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கதையை நாம் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்களாகப் பெலிஸ்தரின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தனர் என்று பார்க்கிறோம். சிம்சோன் பிறந்த காலகட்டத்தில் பெலிஸ்தர் கானானின் தென்மேற்கு திசையில் வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்கள் ஐந்து முக்கிய பட்டணங்களைக் கட்டினர் . பெலிஸ்தர் இஸ்ரவேலை பிடிக்க கையாடியது ஒரு வித்தியாசமான முறை என்று சரித்திர வல்லுநர் கூறுகின்றனர். அவர்கள் கானான் முழுவதும் பரவியிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களை ஒரே சமயத்தில் கைப்பற்றவில்லை. மாறாக, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாக, வியாபார, திருமண உறவுகள் போன்ற யுக்திகளை பயன்படுத்தி, சிறிது சிறிதாக தங்கள் வசப்படுத்தினர். என்ன நடக்கிறது என்று உணருமுன்னரே, அவர்கள் பெலிஸ்தியரின் பிடியில் சிக்கினர். தாண், யூதா கோத்திரங்களே இவ்வாறு பெலிஸ்தியருக்கு அடிமைகளான முதல் கோத்திரங்கள் ஆகும்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்  கர்த்தர் இஸ்ரவேல் மக்களை விடுவிக்க உபயோகப்படுத்தின வாழ்க்கை என்னும் அரங்கத்தில், சிம்சோனின் வாழ்க்கை என்னும் நாடகம் ஆரம்பமாகிறது.

இளைஞனான சிம்சோனைப்பற்றியும் அவன் வளர்ந்த குடும்பத்தையும் நாம் படிக்குமுன்னர், இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு பெலிஸ்தருக்கு அடிமையானார்கள் என்று சிந்திப்பது அவசியம் என்று  நினைக்கிறேன்.

பெலிஸ்தர் யுத்தம் செய்து வெற்றி பெறவில்லை, பெலிஸ்தரின் சேனை இஸ்ரவேலை முற்றுகையிடவும் இல்லை. பின்னர் எப்படி ஆயிற்று? பெலிஸ்தரின் ஐந்து பட்டணங்களின் பிரபுக்களும் தங்கள் மூளையை உபயோகப்படுத்தி, இஸ்ரவேல் மக்களுடன் சம்பந்தம் கலந்ததாலேயே இது ஆயிற்று. அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் வியாபார சம்பந்தம் கலந்தும், திருமண சம்பந்தம் கலந்தும் தங்கள் வாழ்க்கையை இஸ்ரவேல் மக்களோடு பின்னி பிணைந்து விட்டதாலேயே இது ஆயிற்று. சிறிது காலம் கடந்தபின்னர் இஸ்ரவேலரால் அந்த சம்பந்தத்தை விட்டுப் பிரியவே முடியவில்லை.

நாம் நடக்கும் வழியில் உள்ள ஒரு குழியானது கெட்டநீர் தேங்கி நாற்றம் எடுத்துக் கொண்டிருந்தால் நாம் அதில் கால் வைக்க மாட்டோம் அல்லவா? ஆனால் ஒரு குழியானது மலர்ச்செடிகளால் மூடப்பட்டு, அழகான நடைபாதை போல காட்சியளித்தால் நாம் நிச்சயமாக விழுந்து விடுவோம். அப்படித்தானே? இப்படி எத்தனைமுறை நாம் தவறியிருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

சிம்சோனைப்பற்றி நாம் படிக்கும்போது, இப்படிபட்ட குழியில் நான் விழுந்திருக்க மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்கலாம். உலக ஆசைகள் நம்மைப் படுகுழியில் தள்ளிவிடாமல் இருக்க நாம் ஒவ்வொரு நாளும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. (மத்:7:13)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment