கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1945 பிள்ளைகளை வளர்க்க ஜெபம் தேவை!

நியாதிபதிகள்: 13:8 “….பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்”.

ஒருநாள் அமெரிச்காவில் வாழும் ஒரு இளம் பெண் என்னிடம் , ” அக்கா நீங்கள் வேலையும் செய்து கொண்டு, எப்படி உங்கள் இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, கர்த்தருக்குள் வளர்த்து, இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கைத்துணையையும் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள். நான் அதற்கு பதிலாக புன்னகைக்கத்தான் முடிந்தது.

இன்றும் என்னிடம் யாராவது கேட்டால் பதிலுக்கு ஒரு புன்முறுவல்தான் வரும். ஏனெனில் எனக்கு ஒவ்வொரு வயதும் கூடும்போது, என் பிள்ளைகளை இந்த அளவுக்கு நேசமுள்ள பிள்ளைகளாய், கர்த்தருக்கு பயந்த பிள்ளைகளாய்  வளர்க்க உதவியது தேவனாகிய கர்த்தரே என்பதை அதிகமாக உணருகிறேன்.

இன்றைய இளம் பெண்கள் தமக்கு பிறக்கும் குழந்தைகள் அழகாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர்,  குழந்தைகள் எந்த தொந்தரவும் பண்ணாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர். குழந்தைகள் மழலைப் பருவத்தைத் தாண்டி வளர ஆரம்பித்தவுடனே அவர்களை ஒரு சுமையாகவே பார்க்கிறார்கள். பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுப்பதில்லை. பிள்ளைகள் முன்னால் சாட்சியாக வாழ்வதுமில்லை. பிள்ளைகளுக்காக ஜெபிப்பதுமில்லை!

மனோவாவையும் அவனுடைய பக்தியுள்ள மனைவியையும் போல நம்முடைய பிள்ளைகளை வளர்க்க நாம் தேவனுடைய உதவியை நாடுவது எவ்வளவு அவசியம்! கர்த்தர் கொடுக்கும் ஞானத்தின்படி பிள்ளைகளை வளர்ப்போமானால்  நம் குடும்பத்துக்கு நாம் போடும் அஸ்திபாரம் பரலோகம் வரைத் தொடரும்.

கர்த்தருடைய சமுகத்தை நாடும் ஒவ்வொரு தகப்பனோடும் தாயோடும் தேவனாகிய கர்த்தர் துணை நின்று பிள்ளைகளை வளர்க்கும் ஞானத்தை அருளுவார் என்பதற்கு மனோவாவும் அவன் மனைவியுமே உதாரணம்.

மனோவாவும் அவன் மனைவியும்   பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பியும் ஆண்டவரே  என்று தேவனிடத்தில் காத்திருந்ததைப் போல நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க தேவன் நமக்குக் கற்றுக்கொடுக்கும்படி என்றாவது ஜெபித்திருக்கிறோமா?

நம்முடைய கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நம் பிள்ளைகளை சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், கர்த்தருடைய கரத்தில் உபயோகப்படும் பாத்திரமாகவும் வளர்க்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்பதை ஒருக்காலும் மறந்து போகாதே! நம் பிள்ளைகளுக்காக நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவர்களுடைய வாழ்க்கையை செவ்வையாக்கும்.

இன்று உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் நடுவே எப்படிபட்ட உறவு காணப்படுகிறது? உங்கள் வாழ்க்கையை அவர்கள் முன்மாதிரியாக எடுத்து வாழ்கிறார்களா? உங்களோடு தங்கள் மனதில் உள்ளவைகளை பகிர்ந்து கொள்வார்களா? உங்களோடு ஜெபிப்பார்களா?

அப்படியல்லாமல் ஐயோ என் பிள்ளைகளிடம் கீழ்ப்படிதலே இல்லை, சீர்கெட்டு போய்விடுவார்களோ என்று கலங்கிக்கொண்டிருக்கீற்களா? மனோவாவையும் அவன் மனைவியையும் போல தேவனுடைய சமுகத்தில் காத்திருங்கள்! பிள்ளைகளை வளர்க்கும் ஞானத்தை அன்பே உருவான பரம தகப்பனாகிய அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment