ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;”
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை சிலுவை பரியந்தம் தாழ்த்தி, தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி, தம்மையே நமக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த நாள் இது! அவர் தம்முடைய மரணத்தின் மூலம் நமக்கு பெற்றுத்தந்த இரட்சிப்புக்காகவும், பாவத்தின்மேலும் மரணத்தின் மேலும் கொடுத்த ஜெயத்திற்காகவும் இன்று நாம் அவரை ஸ்தோத்தரிப்போம்.
நாம் ரூத்தின் சரித்திரத்தை தொடரலாம்!
தாவீதின் கதையைக்கேளுங்க!
பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க!
இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது,
தாவீதின், அந்தத் தாவீதின் கதையைக் கேளுங்க!
இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி என் மனதினுள் படமாக வரும்! கடந்த முறை இஸ்ரவேலுக்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் சண்டையிட்ட மலையைப் பார்த்தோம்! அங்கு நின்றபோது என் மனக்கண்கள் அந்தக் காட்சியை அப்ப்டியே கண்டன!
தாவீது மட்டும் அல்ல, நாம் படித்துக் கொண்டிருக்கும் ரூத்தும் கூட மிகவும் தைரியசாலிதான்!
ரூத் ஒரு தைரியசாலி என்று நான் கூறுவதற்கு, அவள் பயமில்லாத அல்லது வேதனையில்லாத பெண் என்று அர்த்தம் இல்லை. நான் ஒருவேளை ரூத்தைப் போல அல்லது உங்களில் அநேகரைப் போல என்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு, ஒரு புதிய தேசத்துக்கு செல்வேனானால் என் மனது வேதனையால் துடித்துப் போகும்.
ரூத் மோவாபை விட்டு புறப்பட்டபோது, அவள் மனதிலிருந்த பயத்தையும், வேதனையையும் ஊடுருவி அவள் கண்கள், அவள் மனது ஏங்கிய எதிர்காலத்தை நோக்கின! அவள் மனம் தன் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவே ஏங்கிற்று.
நம்முடைய வாழ்வில் கூட தேவனாகியக் கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் தைரியமாக ரூத்தைப் போல துணிச்சலுடன் அவர் வழிநடத்தும் பாதையில் அவரை விசுவாசித்து அடி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் என்ன என்று நமக்கு புலப்படாதிருக்கும்போது, நாம் செல்லும் வழி எது என்று நமக்கு புரியாதிருக்கும்போது, துணிச்சலுடன் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று தேவனாகியக் கர்த்தர் விரும்புகிறார்.
ரூத் மோவாபை விட்டுப் புறப்பட்டபோது அவள் இஸ்ரவேலின் மேசியாவின் வம்சவரலாற்றில் இடம் பெறப்போவதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். விசுவாசத்தோடு, தைரியத்தோடு மோவாபை விட்டுப் புறப்பட்ட அவளின் வாழ்க்கையில் கர்த்தர் அவள் அறியாத பெரியத் திட்டங்களை வைத்திருந்தார்.
தாவீதைப் போல, தானியேலைப் போல, ரூத்தைப் போல கர்த்தரின் கட்டளையின்படி செல்லும் தைரியம் எனக்கு உண்டா?
ஆண்டவரே ! என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி, நீர் காட்டும் பாதையின் மறுமுனையை என்னால் பார்க்க முடியாவிட்டாலும், விசுவாசத்தோடு உம்மைப் பின்பற்றும் தைரியத்தை எனக்கு இன்று தாரும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
