1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;”
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று 2000 இதழ்களை முடித்திருக்கும், மகிமையுள்ள கிறிஸ்து ராஜாவின் மலருக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
http://www.rajavinmalargal.com என்ற இணையதளத்திற்கு ஒவ்வொரு நாட்களும் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் 5000 க்கும் மேற்பட்ட ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், என் தேவனுடைய கர்த்தரின் நாமத்தில் எல்லா ஆசீர்வாதங்களும் உண்டாகட்டும்! அதுமட்டுமல்ல இந்த செய்தியை தங்களுடைய வாட்ஸ்அப் மூலமாக அநேகருக்கு அனுப்பும் நண்பர்களும் உண்டு! கர்த்தர் தாமே இந்த ஊழியத்தின் பங்கை உங்களுக்கு அருளட்டும்!
இந்த மலரைத் தொடர்ந்து எழுதும்படியான எல்லா கிருபைகளையும், ஞானத்தையும் கர்த்தர் அருளுமாறு எனக்காக ஜெபியுங்கள்!
இன்று நாம் நகோமி, ரூத், போவாஸ் இவர்களின் குடும்பத்தை விட்டு, எல்க்கானா, அன்னாள், சாமுவேல் என்பவர்களின் குடும்பத்துக்குள் நுழையப் போகிறோம்.
ஆண் பெண் என்ற பாகுபாடு அதிகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டுள்ளது.
இவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதுவதற்காக நான் அநேக வேதாகம விளக்கவுரைகளைப் படித்துக் கொண்டிருந்த போது, கிறிஸ்தவ விளக்கவுரை ஆசிரியர்கள் கூட, அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்பதை அந்தக்காலத்தில் அநேக குடும்பங்களில் இருந்த ஒரு சாதாரண வழக்கம் போலத்தான் எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக யாக்கோபுக்கும், தாவீதுக்கும் இரண்டு மனைவிகள் இருந்ததால், நாம் அவர்களை நம் வாழ்க்கையின் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதுமட்டுமல்ல அவர்கள் இரண்டு மனைவிகளை அடைந்ததற்கான தண்டனையை அவர்கள் குடும்பம் நிச்சயமாக அனுபவித்தது அல்லவா!
எல்க்கானா என்ற ஒருவனை மணந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் படிக்கும் முன்னர், ஏதேன் தோட்டத்தில் தேவன் அமைத்த திருமணம் என்ற பந்தத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவைத்தான் கர்த்தர் ஏற்படுத்தினாரே தவிர ஒருவனுக்கு இரண்டு பேர், அல்லது ஒருத்திக்கு பலர் என்ற உறவுகள் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.
இன்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கும் சிலர் கூட , ‘ எல்லோரும் செய்வதைத் தானே நானும் செய்கிறேன், அதில் என்னத் தவறு ‘ என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மற்றவர்களுடைய கண்களுக்கு சரி என்று படுவது கர்த்தருடைய கண்களுக்கு தவறு என்று படும் அல்லவா?
மற்றவர்களுடைய கண்களுக்கு சரி என்றுப் பட்டவிதமாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இரண்டு மனைவிகளை மணந்த எல்க்கானா தன் குடும்பத்தில் வேதனையையும் கண்ணீரையும் விதைத்தான். அவன் இரு பெண்களை மணந்து கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தபோது அதனால் வரப்போகும் மனவேதனைகளை சற்றும் கற்பனைகூட செய்திருக்க மாட்டான்.
நாம் கூட அப்படித்தான், பின் வரும் விளைவுகளை உணராமல் நாம் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை செய்து விடுகிறோம். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு பிரியமில்லாத எந்த செயலை நீ செய்தாலும் அதனால் வரும் வேதனையை ஒருநாள் அனுபவிக்கத்தான் வேண்டும்.
ஒருவேளை நாம் இன்று அனலுமில்லாமல், குளிருமில்லாமல் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெது வெதுவென்று இருப்போமானால் , நாம் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து, நம்முடைய பார்வையில் சரியானவைகளை செய்து கொண்டிருப்போமானால், தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்!
கர்த்தருக்கு பிரியமில்லாக உறவுகளைக் கொண்டிருக்கிறாயா? கர்த்தரால் உருவாக்கப்பட்ட உன் திருமண பந்தத்தை அவமரியாதை செய்து கொண்டிருக்கிறாயா? உலகத்தின் பார்வையில் அது ஒருவேளை பெரிய குற்றமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தேவன் உன் வாழ்வில் கண்ணீரையும், வேதனையையும் விதைத்து விடுவார் ஜாக்கிரதை!
இதைப்பற்றி நான் பேசும்பொழுது அநேகர் கேட்கும் ஒரு கேள்வி, ஏன் ஆபிரகாம், தாவீது இவர்கள் அநேகப் பெண்களை மணக்கவில்லையா என்று! அதுதானே இன்று உங்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் இந்த பூமியில் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இந்த பூமியிலேயே தண்டனையும் கொடுக்கப்படும்! ஆபிரகாம் அதை அதிகமாகவே அனுபவித்தார், தாவீது பட்ட பாடுகள் நமக்கு வேண்டாமே!
ஆண்டவரே என்னுடைய பெலவீனமான இருதயத்தை பெலப்படுத்தும்! உம்முடைய பார்வையில் பிரியமாய் நடக்க எனக்கு உதவி தாரும் என்று இன்று ஜெபித்து கர்த்தருக்கு உன்னை ஒப்புவி! வேண்டாத உறுவுகளை அறுத்து விடு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
