1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள்
இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்!
நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால், என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியவே முடியாது. ஆனால் இன்று பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கின்றன. ஒருவேளை இதை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுடைய திருமண வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டிருக்கலாம்!
இந்தக் குடும்பத்தை பார்த்த முதல் பார்வையில் இப்படிப்பட்ட பிரச்சனை எனக்கு இல்லை என்றுதான் எண்ண நமக்குத் தோன்றும்!
ஆனால் நம் வாழ்க்கையில் கணவனை பங்கு போடும் இன்னொரு பெண்தான் நமக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! அந்த இன்னொரு பெண் சில நேரங்களில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் பெண் அதிகாரியாக இருக்கலாம், அல்லது நம்மை அடியோடு வெறுக்கும் அக்கா அல்லது தங்கையாக இருக்கலாம், நம்முடைய அம்மாவின் இடத்தை பிடித்த அப்பாவின் மறுமனையாட்டியாக இருக்கலாம்! எல்லா பெண்களுமே யாராவது இன்னொரு பெண்ணால் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம் என்றுதான் எனக்குத் தோன்றிற்று.
அன்னாளைப் பற்றி படிக்கும் சில வசனங்களிலேயே அவள் அந்தக் குடும்பத்தில் ஒரு பரிதாபமான நிலையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
ஆனால் அன்னாள் என்ற அவளுடைய பெயருக்கு அர்த்தம் என்னத் தெரியுமா? கிருபையும் இரக்கமும் பெற்றவள் என்றுதான் அர்த்தம்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பல பிரச்சனைகளை, போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், நம்முடைய கர்த்தரின் கிருபையும் , இரக்கமும் நம்மை அன்றாடு வழிநடத்துகின்றது அல்லவா? கர்த்தருடைய கிருபை ஒவ்வொரு நாள் காலையிலும் புதியதாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.
அன்னாளின் வாழ்க்கையை வாசிக்கும் நமக்கு இன்று அவள் ஆசீர்வாதம் இல்லாத மலட்டுத் தன்மையோடுத் தெரியலாம். ஆனால் நாளை நாம் நம் வாழ்வில் நடைபெறும் சில சுவையற்ற, வேதனையுள்ள சம்பவங்கள் கூட எவ்வாறு கர்த்தருடைய கிருபையால் கனி கொடுக்கும் சம்பவங்களாக மாற முடியும் என்று காணப் போகிறோம்.
அன்னாள் – கிருபையும் இரக்கமும் பெற்றவள்!
நீயும் நானும் கூடத் தான்!
நாம் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, இன்னொரு பெண்ணால் நாம் பாடுகள் பட்டுக்கொண்டு மன நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் சரி, தேவனாகியக் கர்தர் நம்மேல் வைத்திருக்கும் கிருபை பெற்றவள் என்ற உயர்ந்த எண்ணத்தை, நாம் சற்று நம்மேல் வைக்கக் கூடாதா?
நீ தேவனின் பார்வையில் விலையேறப் பெற்றவள்! இன்று நீ உன்னுடைய பார்வையில் எப்படி இருக்கிறாய்?
உன்னுடைய மதிப்பை கூட்டி எழுதிய தேவனாகிய கர்த்தரை விட உன்னை மதிப்பவர் இந்த உலகில் யாரும் இருக்கவே முடியாது! அல்லேலூயா!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
