கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2036 உன் வாழ்வின் நிலை என்ன?

1 சாமுவேல்: 12: 12 .. உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

நாம் சாமுவேலின் வாழ்க்கையின் கடைசிப்பகுதிக்கு வந்திருக்கிறோம்.

சாமுவேல் இப்பொழுது முதிர்வயதடைந்திருந்தாலும், அவருடைய வாழ்நாள் முழுவதும், மக்களுக்குத் தேவையான ஆலோசனையும், ஆவிக்குரிய வழி நடத்துதலும்  அவரிடம் எப்பொழுதும்  தடையில்லாமல் கிடைத்தது என்பதை எந்த இஸ்ரவேலரும் மறுதலிக்க மாட்டனர்.

இப்பொழுதோ இந்த வயதானவருக்கு பதிலாக ஒரு வாலிபனான, அழகுள்ளவனான, சுறுசுறுப்புள்ளவனான ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரவேலருக்கு உருவாகிற்று!

ஆதலால் சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களை ஒன்று கூட்டி, தம்முடைய தலைமையில் யாதொரு குற்றம் உண்டோ என்று கேட்டார்!

நான் என் சுயநலத்துக்காக வாழ்ந்தது உண்டோ? என்னுடைய தேவைகளை என்றாவது முன் வைத்தேனோ? என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு அவர்களது பதில் ஒட்டுமொத்தமாக இல்லவே இல்லை என்று வந்தது.

சாமுவேல் தம்முடைய ஜனங்களுக்கு தேவனாகிய கர்த்தர் அவர்களை மோசே, ஆரோன் தலைமையில் எகிப்திலிருந்து அழைத்துவந்து இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப் பண்ணினதை நினைவூட்டினார் ( 1 சாமுவேல்:12:6).

மிகுந்த மன வருத்தத்தோடே இஸ்ரவேலர் தங்களுக்கு ராஜா வேண்டும் என்பதை சாமுவேல் ஆமோதித்தார்.  உண்மையில் அவர்கள் தேவனுடைய ராஜரீகத்தையல்லவா புறக்கணிக்கிறார்கள்!

இந்த சமயத்தில் தேவன் அவர்களை புறக்கணித்திருக்கக் கூடும். ஆனால் சாமுவேல் அவர்களை ஒருமுகமாக கர்த்தரை சேவித்து, அவருக்கு பயந்து, அவருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிந்தால் நீங்களும் உங்களை ஆளுகிற உங்கள் ராஜாவும் உங்கள் தேவனைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள் என்றார். (1 சாமுவேல்12:14).

அவரைப் பணிந்து சேவிக்கும் உள்ளமும், அவருக்கு பயந்து வாழும் வாழ்க்கையும், அவருடைய சத்தத்துக்கு ஒவ்வொருநாளும் கீழ்ப்படியும் குணம் இவற்றை தானே கர்த்தர் இன்று நம்மிடமும் எதிர்பார்க்கிறார்!

சாமுவேலின் உள்ளம் அவருடைய ஜனங்களை வெகுவாய் நேசித்தது. அவர்கள் மேல் தன்நலமற்ற அக்கறை கொண்டிருந்தது. தம்மைப் புறக்கணிக்கும் மக்களை அவர் புறக்கணிக்கவில்லை!

இதை எழுதும்போது கடற்கரையில் புயலினால் ஒதுங்கிய சிறு சிறு நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாய் பிடித்து கடலில் எறிந்து கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணின் கதை நினைவுக்கு வருகிறது! அவள் இதைப் பொறுமையாய் பல மணிநேரம் செய்வதைப் பார்த்த ஒருவர் அவளை அணுகி, இந்த பெரிய  கடலைப்ப் பார்! உன்னால் இந்த எல்லா மீன்களையும் காப்பாற்ற முடியாது, இவற்றின் வாழ்க்கையை மாற்ற முடியாது விட்டுவிடு என்றார்.

அந்தப்பெண்ணின் முகம் சற்று நேரம் வாடியது. ஆனால் மறுபடியும் அந்த மீன்களை ஒவ்வொன்றாக பிடித்து கடலில் விட ஆரம்பித்த்தாள். பின்னர் அந்த மனிதனை நோக்கி புன்முறுவலுடன், இந்த ஒரு மீனைக் காப்பாற்றி விட்டேன்! அதன் வாழ்க்கையை மாற்றி விட்டேன் என்றாள். ஒரு மாறுபட்ட நோக்கம்! மாறுபட்ட தன்மை கொண்ட வாழ்க்கை!

சாமுவேல் தன் ஜனங்களை நோக்கி அவர்கள் தேவனை நோக்கும்படி வேண்டியபோது அவருடைய வார்த்தை அத்தனை பேரின் உள்ளங்களையும் தொட்டதா அல்லது சிலரை மட்டும் தொட்டதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய் சிந்தை மட்டும் தேவனாகிய கர்த்தரையே நோக்கிப் பார்த்தது! அவர் அவர்களில் மாறுபட்டவராக இருந்தார். அவர் தயவும், அன்பும், பரந்த உள்ளமும் கொண்டவராக இருந்தார்.

இன்று  உன் வாழ்க்கையின் நிலை என்ன? இந்த பரந்த கடல் போன்ற உலகில் ஒரு மாறுபட்ட வாழ்க்கை உனக்கு உண்டா?சிந்தித்து பார்! கர்த்தரையே சேவித்து, அவருக்கு பயந்து, அவருக்கு மகிமையான வாழ்க்கை உண்டா?

இன்று  உன்னுடைய குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒரு மாறுபட்ட தேவ மகிமைக்கான வாழ்க்கையை வாழ முடிவு செய்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment