கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2039 நீங்கள் என் ஊழியக்காரர் மட்டுமல்ல!

யோவான் 15:15   நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்

இந்த புதிய மாதத்திலும் நம்முடைய தின தியானத்தைத் தொடர கர்த்தர் கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன்.

பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன் நினைவிருக்கிறதா?

நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது  நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒருசிலர்  நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெரியுமா?   நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா?

நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் ஒரு உன்னதமான உறவை வெளிப்படுத்துகிறார்.

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார்.

தேவன் நம்மை ஒரு நல்ல, நம்பகமான நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இருதயத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார். இருளான வேளையிலும் அவரை முற்றிலும் நம்பும் ஒரு நண்பராக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

பிதாவாகிய தேவனுடைய இந்த வாஞ்சையைத் தான்  இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவருடைய பிதாவானவர், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர், மகத்துவமுள்ளவர்,நம்முடைய இரட்சகர், நம்மிடம் நட்பை எதிர்பார்க்கிறார். என்னிடமா நட்பை விரும்புகிறார் என்று நினைக்கும்போது புல்லரிக்கிறதல்லவா?

நான் ஸ்கூலில் படித்த போது அங்கு எல்லோராலும் விரும்பப்பட்ட அழகான, திறமையுள்ள ஒரு பெண் இருந்தாள். எல்லாருக்கும் அவளுடைய நட்புக்காக ஓடுவார்கள். நான் அமைதியாக ஒதுங்கியிருப்பேன். ஒருநாள் அவள் என்னிடம் வந்து என்னோடு நட்பு கொள்ள ஆசையாக இருப்பதாக சொன்னாள். அன்று எனக்கு சொல்ல முடியாத அளவு மிகவும் சந்தோஷம்! அவள் இன்று ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பதை பெருமையுடன் பார்ப்பதுண்டு!

ஆனால் கர்த்தராகிய இயேசு சொன்ன இந்தக் காரியம்  நமக்கு  பல்லாயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றல்லாவா?

தேவாதி தேவனோடு நட்பு! அவர் இதை என்னிடமும் உன்னிடமும் விரும்புகிறார்! தினமும் என்னோடு பேச வேண்டுமாம்! என்னோடு நடக்க வேண்டுமாம்! அதுமட்டுமல்ல ! அவர் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறார்.

அவரை நண்பராகக் கொள்வதால் அவர் என்னைக் கண்மணி போல் காக்கிறார்! அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை! நான் அவரோடு பேசும்போது மகிழ்ச்சியடைகிறார் , ஏனெனில் அவருடைய நட்பை நான் ஏற்றுக்கொண்டதால் பரலோகத்தில் அத்தனை மகிழ்ச்சி!

இவரை நண்பராகக் கொண்டதற்காக நான் கர்த்தருக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய நன்மையை விரும்பும் ஒரு நண்பர், என்றும் மாறாத நட்பையும்,  நம்பகமான நட்பையும்  நமக்கு அளிப்பவர்!

சாது சுந்தர்சிங் சொன்னர், ‘ நாம் பத்து அல்லது இருபது நிமிடம் ஜெபம் பண்ணவே கஷ்டப்படுகிறோமே! எப்படி ஆண்டவோடு கூட் நித்தியமாய் வாழப்போகிறோம்! இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா?’  என்று,  உண்மைதானே!

தேவாதி தேவனுடைய நல்ல நட்பு உனக்கு வேண்டாமா?

உன்னுடைய இன்றைய உறவு, நீ செலவிடும் நேரம் இவை உன்னை நான் கர்த்தருடைய சிநேகிதர் என்று உணர வைக்கிறதா?

இல்லையானால் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் நட்பை ஏற்படுத்து! அவரோடு அதிகமாகப் பேசி பழகு! அவரது நட்பின் அருமையை உணர்ந்து கொள்வாய்!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

 

ஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

 

 

 

 

 

 

Leave a comment