கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2041 பயப்படுதலைப் பார்க்கிலும் விசுவாசமே நலம்!

1 சாமுவேல் 13: 5,6  பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும்,துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.

இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டனர் என்று பார்த்தோம். ஒரு ராஜா கிடைத்த பின்னர் அவர்கள் தங்களுக்கு தாங்களே வினை வைத்த மாதிரி ஆகி விட்டது. அவர்களோடு இருந்த ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கு பயந்த அவர்கள், இப்பொழுது அவர்களை ஆளத்தொடங்கிய ராஜாக்களுக்கு பயப்படவே இல்லை. விசேஷமாக பெலிஸ்தியர் தாங்கள் யாரென்று சவுலுக்குக் காட்ட ஆரம்பித்தனர்.

இதற்கு முன்னால் இக்கட்டில் தேவனிடத்தில் முறையிட்ட இஸ்ரவேலரோ இப்பொழுது தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள் என்று பார்க்கிறோம். தங்கள் வீடுகளை விட்டு ஓடிப்போகும்படி பயம் அங்கே தலைவிரித்து ஆடியது.

என்ன பரிதாபம்! தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தி தேவனாகிய கர்த்தரிடம் மனந்திரும்பாமல் காடுகளில் வாசம் பண்ணுவதைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கையை ஆளுகை செய்ய வேண்டிய கர்த்தரை ஒதுக்கி விட்டு பயத்துக்கு அடிமையானார்கள்.

அப்பப்பா! நான் இப்படிப்பட்ட தவறை ஒருக்காலும் செய்ய மாட்டேன் என்று இருமாப்பாய் யாரும் எண்ணி விடாதீர்கள்!

எத்தனைமுறையோ  பயம் நம் கதவைத் தட்டியபோது நாம் ஒளிந்து கொள்ள இடம் தேடியிருக்கிறோம் என்று நம் மனதுக்குத் தெரியும்! கர்த்தரைத் தேடாமல் யாராவது இந்த நேரத்தில் உதவி செய்வார் என்று காடு மேடாக நாம் அலையவில்லையா?

என்றாவது பயம் உங்களை உறையச் செய்திருக்கிறதா? திருமண உறவைக்குறித்த பயம், வருமானத்தைக்குறித்த பயம், வேலையைக்குறித்த பயம், நோயைக்குறித்த பயம், பிள்ளைகளைக்குறித்த பயம், முதிர்வயதைக் குறித்த பயம், மரணத்தைக்குறித்த பயம்………….

நம்முடைய நங்கூரமாகிய இயேசு கிறிஸ்துமேல் உள்ள உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் தான் நம் பயத்தை நீக்கி, நம் வாழ்க்கை என்னும் படகில் நாம் பத்திரமாக பயணம் செய்ய உதவும்.

பயப்படுதலைப் பார்க்கிலும்  நம்பிக்கையும், விசுவாசமுமே நலம் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எப்படி? 

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

Leave a comment