1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்! பின்னர் தாவீது பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் எவ்வளவு உயர்வு தாழ்வுகள் இருந்தன!
தாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். தாவீதைப் பார்! அடுத்தவன் மனைவியை சொந்தமாக்கிக் கொண்டான் அவனைக் கடவுள் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று சொல்லவில்லையா என்று பலர் கூறுகின்றனர்.
அப்படி பேசுகிறவர்கள் ஒரு நிமிடம் கவனியுங்கள்!
கர்த்தர் தாவீது பாவம் செய்தபோது கைத்தட்டி இவன் என் இருதயத்திற்கேற்றவன் என்றாரா? இல்லவே இல்லை! இந்த இணைய தளத்தில், என்னோடு கூட தொடர்ந்து தாவீதின் வழ்க்கையை படியுங்கள்!
இன்று நாம் பார்க்கிற வசனத்தில் சாமுவேல் முதன்முறையாக சவுலிடம் அவன் ராஜ்யபாரம் நிலைநிற்காது என்பதைப் பார்க்கிறோம்.
அவனுக்குப் பதிலாக கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒருவனைத் தேடுவதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தாவீது தம்முடைய குடும்பத்தின் ஆடுகளையல்லவா மேய்த்துக்கொண்டிருந்தான்! அந்த நாட்களில் தாவீதின் உள்ளம் உண்மையில் தேவனை நாடிற்று, காடுகளில் இருந்த தனிமையான வேளைகளில் அவன் கர்த்தருடன் பேசினான். தேவனுடைய சித்தத்தை செய்ய நாடினான். சிறுவயதிலேயே கோலியாத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் அவனுக்கு இருந்தது.
இன்று கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற வாழ்க்கை எதுவாக இருக்க முடியும்?
குற்றம் செய்தால் சாக்குபோக்கு சொல்லும் வாழ்க்கை அல்ல!
உண்மையாய் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் வாழ்க்கை! பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் வாழ்க்கை! ஒவ்வொருநாளும் அவரோடு நடக்க முயற்சி செய்யும் வாழ்க்கை.
அது உன்னில் காணப்படுகிறதா?
தம் இருதயத்திற்கேற்ற ஒரு மனிதனைக் கர்த்தர் நமக்குள்ளும் தேடுகிறார்!அவரை உண்மையாய் வாஞ்சிக்கும் உன் உள்ளத்தை அவர் அறிவார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
