1 சாமுவேல் 17: 36,37 அந்தச் சிங்கத்தையும், கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்.
என்னுடைய பேரன் Zac ஒரு நான்கு வயது போல இருந்தபோது, அவனுக்கு பிரியமான விளையாட்டு, பில்டிங் பிளாக் (building blocks) வைத்து ரயில் பெட்டி கட்டுவதுதான். அவன் ஒவ்வொரு பெட்டியாக செய்து அதை இணைத்து வீட்டில் சுற்றி சுற்றி வருவான்.
அவனுடைய சிறிய கையால் ஒவ்வொரு பிளாக்கையும் இணைக்கும் போது இப்படித்தானே நம்முடைய வாழ்க்கையும் என்று யோசிப்பேன். ஒவ்வொன்றாக அடி மேல் அடி வைத்தது போல் ஒன்று பின்னால் ஒன்றாய் நடந்த சம்பவங்களால் தானே நாம் நாமாக உருவாகியிருக்கிறோம்.
அப்படித்தான் நாம் படிக்கும் தாவீதின் வாழ்க்கையும் உருவாயிற்று. சின்ன தாவீது சில கற்களையும், கவணையும் கொண்டு பெரிய கோலியாத்தைக் கொன்ற மாபெரும் சம்பவம் நம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தாலும், அவனை இப்படிப்பட்ட தாவீதாக உருவாக்கிய சம்பவங்களைத் தான் இன்று பார்க்கப்போகிறோம்.
தாவீது கோலியாத்தைக் கொல்லும் முன்னால் சிறுவனாக தன்னுடையத் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கரடியும், பின்னர் ஒரு சிங்கமும் ஆடுகளைத் தாக்க வந்தது. இவைகள் தான் தாவீதின் வாழ்க்கையில் கர்த்தர் உபயோகப்படுத்தின முதல் பில்டிங் பிளாக் என்று நினைக்கிறேன்.
பின்னர் அவன் சவுலை அலைக்கழித்த பொல்லாத ஆவியிடமிருந்து அவனை அமைதிப்படுத்த சுரமண்டலம் வாசிப்பவனாகப் பார்க்கிறோம். இது ஒன்றும் பெரிய அரசாங்க வேலையோ அல்லது மதிப்பிற்குரிய வேலையோ இல்லை. ஒரு ஆறுதளிக்கும் இசையை வாசிப்பவன் அவ்வளவுதான்!
அதன்பின்னர் சவுலின் சேனையிலிருந்த அவனுடைய சகோதரர் யுத்தத்துக்கு சென்றபின் அவனுடைய தகப்பனாகிய ஈசாய் தாவீதை தன்னுடைய மூத்த குமாரருக்கு உணவு எடுத்த செல்ல உபயோகப்படுத்தினான். மற்றுமொரு முக்கியத்துவம் இல்லாத வேலை!
எந்த இடத்தையும் நிரப்ப ஒருவன் தேவைப்பட்ட போது அந்த இடத்தை நிரப்ப தாவீது தயாராக இருந்தான். அது மதிப்பிற்குரிய வேலையோ அல்லது முக்கியத்துவம் இல்லாத வேலையோ அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை!
இது எப்படியாயிற்று? ஒவ்வொரு சிறிய பில்டிங் பிளாக் போல, முக்கியத்துவம் இல்லாதது போல் காணப்பட்ட ஒவ்வொரு வேலயை அவன் செய்தபோதும் அவன் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்க்கவும், அவரை விசுவாசிக்கவும், அவரை முழுதும் நம்பவும் கற்றுக்கொண்டான்.
இன்று நீ ஒருவேளை என் தகுதிக்கு ஏற்ற வேலை எனக்கு இல்லை, என் திறமைகள் எல்லாம் வீணாகிறது என்று நினைத்து வருந்தலாம்!
ஐயோ இந்த முக்கியத்துவம் இல்லாத வேலையால் எனக்கு என்ன பிரயோஜனம்? என் எதிர்காலமே பாழாகிவிடுமோ என்று எண்ணலாம்!
அல்லது நீ வேலை செய்யும் இடத்தின் சுற்று சூழல் உனக்குத் திருப்தி அளிக்காமல் வேதனையாக அமைந்திருக்கலாம்!
ஆனால் நீயும் நானும் காணமுடியாத கை ஒன்று, சிறு சிறு பிளாக்குகளால் உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது! நாம் காண முடியாத தேவனுடைய திட்டம் உனக்கு ஒருநாள் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
நீ ஒன்றும் தண்ணீர் கலந்து பிசைந்து உருவாகும் மண் கலவையான பரிசுத்தவான் அல்ல!
நீ ஒன்றும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து மைக்ரோ வேவ் பண்ணப்பட்ட ரெடிமேட் உணவு அல்ல!
நீ பிளாஸ்டிக் அல்லது காகிதத்தினால் கட்டப்படும் கட்டிடமும் அல்ல!
ஷ் ஷ் ஷ்! சற்று பொறுமையாயிறு! கர்த்தரை நம்பு! அவர் உன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்!
ஒருநாள் நீ உன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, உன்னுடைய உறுதியான அஸ்திபாரத்தையும், உன்னுடைய அழகிய கிறிஸ்தவ வாழ்க்கையையும், உன் வாழ்க்கையை கர்த்தர் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல உருவாக்கிய விதத்தையும் நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்வாய்!
ஆதலால் இன்று சோர்ந்து போகாதே!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
