கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2062 உனக்கு சுகமளிக்கும் தைலம் அவரே!

1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு  சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…

மீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.

மீகாள் , தான் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் அவள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன?

ஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான்! அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை!

மீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம்  தன் பிள்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா? தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா?

தாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும்!  அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான்.

இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம்! மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா? மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம்  என்று  சவுல் ராஜா எண்ணினான். அது வேறொனுமில்லை! மகளின்  காதலைக் கொண்டு மருமகனைக் கொல்ல சதி!

சவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது.  ஆதலால் தன்னுடைய குடும்பத்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய  பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.

இது சில  குடும்பங்களிலும் நடப்பதுதானே!  சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள்  தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா?  வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு!

இன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா? உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா? நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா?

அன்பு சகோதரனே! சகோதரியே! உன் உள்ளம் புண்பட்டு இருப்பதைக் கர்த்தர் காண்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார்! அவர் உங்களுக்கு சுகமளிக்கும்  தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment