கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2065 உன்னைத் தம் பலத்தால் இடைகட்டுவார்!

1 சாமுவேல் 19:13 – 16  மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே , ஒரு வெள்ளாட்டுத்தோலைப் போட்டு, துப்பட்டியினால்  மூடி வைத்தாள். தாவீதைக்கொண்டு வர சேவகரை அனுப்பினபோது அவர் வியாதியாயிருக்கிறார் எனறாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். சேவகர் வந்தபோது, இதோ சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

மீகாளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நாம் நேற்று படித்தோம். பெண்களுக்கு சமுதாயத்தில் எந்த இடமும் கொடுக்கப்படாத காலம் அது. அவள் தகப்பனாகிய சவுலுக்கு சொந்தமான ஒரு பொருள் போலத்தான் அந்த ராஜாங்கத்தில் வளர்ந்தாள். அங்கு ஆண்கள் எடுத்த எந்த முடிவையும் மாற்றவோ, எதிர்க்கவோ திராணியற்றவர்கள் பெண்கள்.

ராஜாவாகிய சவுல், தாவீதைக் கொல்லும்படி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும், சேவகர்களுக்கும் கட்டளையிட்டபோது, மீகாள் மிகவும் தைரியமான முடிவை எடுக்கவேண்டியிருந்தது.

அவள் தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி தப்புவித்ததுமல்லாமல், அவன் படுத்திருந்த படுக்கையில் ஒரு சுரூபத்தை படுக்கவைத்து,அதை ஒரு வெள்ளாட்டுத்தோலினால் மூடினாள் என்று பார்க்கிறோம். தாவீதைத் தேடி யாராவது வந்தால் அவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல ஏதுவாக்கினாள்.

மூர்க்கமாய் தாவீதைக் கொல்லத்தேடும் சவுலுக்கு எதிராக எடுத்த முடிவு அவளுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கக்கூடும். சவுல் கையில் ராஜா என்னும் அதிகாரம் இருந்ததை மறந்துவிடாதீர்கள்!

தாவீது வியாதியாயிருக்கிறான் என்று அவள் சவுலுக்கு சொல்லியனுப்பியபோது, அவனை படுக்கையிலேயே கொல்ல முடிவு செய்து தன்னுடைய சேவகரை அனுப்புகிறான் சவுல். இங்கேதான் மீகாளுடைய நாடகம் வெட்ட வெளிச்சமாகியது.

கட்டிலில் படுத்திருந்தது தாவீது அல்ல என்ற உண்மையை அந்த சேவகர் எந்த முகத்துடன் சவுலிடம் கூறியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது!!!!

தைரியம் என்ற வார்த்தைக்கு பயத்தை வெல்லும் என்று மட்டும் அர்த்தம் அல்ல, அதற்கு ஆபத்து வரும்போது துணிவாக முடிவு எடுப்பது என்பதும் பொருந்தும். மீகாள் துணிகரமான முடிவை எடுத்து தாவீதைக் காப்பாற்றினாள்!

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் பாடு, நிந்தை, போராட்டம் மத்தியில் சுவிசேஷத்தை சொல்லும்படி தேவனுக்குள் தைரியம் கொண்டதாக ( 1 தெச: 2:1) ல் கூறுவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய தைரியம் கர்த்தரால் வந்தது.

அநேக வேதனைகளும், பாடுகளும் நம்மை சுற்றியிருக்கும் வேளையில் துணிகரமாக முடிவு எடுக்க நமக்கு தேவனாகிய கர்த்தரின் தயவு வேண்டும்.

ஒருவேளை தாவீது இந்த இரகசியத்தை தன் மனைவியாகிய மீகாளுக்கு கற்றுக் கொடுத்தானோ என்னவோ? தாவீது சொல்வதைப் பாருங்கள்!

கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? என்னை பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. (சங்: 18:31-32)

இன்று உனக்கு தேவனாகிய கர்த்தரின் பலம் தேவையா?

அவர் உன்னோடு இருப்பாரானால் நீ எந்த இருண்ட சூழ்நிலையில் இருந்தாலும், ஒரு  நல்ல முடிவை நீ துணிவாக தைரியமாக எடுக்க உனக்கு உதவிசெய்வார்! உன்னைத் தம் பலத்தால் இடைகட்டி, உன் வழிஅயை செவ்வைப்படுதுவார்!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment