கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2103 நமக்குள்ளே வீசும் பயம் என்னும் ஆபத்தான புயல்

1 சாமுவேல் 28:3 – 5  சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்….. பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது.

தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன்,  நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன்.

பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாக பாளயமிறங்கினார்கள். சவுல் அவர்களின் பாளயத்தைக் கண்டபோது பயந்து நடுங்கினான். அந்த சமயத்தில் சாமுவேல் மரித்து விட்டான். அவனை தீர்க்கதரிசிகளின் பட்டணமாகிய ராமாவிலே அடக்கம் பண்ணினார்கள்.

கர்த்தருடைய செல்வாக்கோ அல்லது கர்த்தருடைய மனிதரின் செல்வாக்கோ இல்லாத சவுல், பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டவுடன் பயந்தான். கர்த்தருக்கு பயந்தால் தானே மனிதரிடம் பயப்பட மாட்டோம். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன சவுல் இப்படி நடுங்கியது சகஜம் தானே! சாமுவேல் மரித்தவுடன் தான் வெறுமையானதை சவுல் உணர்ந்தான்.

மறுபடியும் மறுபடியும் கர்த்தரின் ஆலோசனையை ஏற்காத அவனுக்கு, இப்பொழுது ஆலோசனை சொல்ல யாரும் இல்லை! தீமையோடு விளையாடின அவனுக்குள் நன்மையானது ஏதும் இல்லை. கர்த்தர் அவனுடைய வாழ்வில் அங்கமாகவும் இல்லை! அதுமட்டுமல்ல! தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரத்தில் மட்டும்தானே அவன் தேவனைப் பற்றி நினைத்தான்.

நம்மில் எத்தனைபேர் இன்று சவுலைப்போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் தான் கர்த்தர் வேண்டும். மற்ற நேரத்தில் நம்முடைய வாழ்க்கையை நாமே வாழ ஆசைப்படுகிறோம் அல்லவா? நமக்கு பயம் வரும் வேளையில் மட்டுமே கடவுள் வேண்டும் நமக்கு!

கீழ்ப்படியாமைக்கு அடிமையானவர்கள், நிச்சயமாக பயத்துக்கும் அடிமையாவார்கள். நமக்குள்ளாக அடிக்கிற பயம் என்கிற புயல் வெளியே அடிக்கிற காற்றையும், புயலையும் விட ஆபத்தானது. சவுலின் உள்ளத்தை பயம் ஆட்கொண்டது!

சிறிய  காரியங்களில் கர்த்தருடைய வார்த்தையை மதிக்காமல், நான் ஒன்றும் பெரிய பாவம் செய்யவில்லையே கர்த்தர் என்னைத் தண்டிக்க மாட்டார் என்று தீமையோடு விளையாடிக்கொண்டிருக்கிறாயா? முள்ளில் உதைப்பது கடினம் என்று தெரியுமா  உனக்கு? ஒருநாள் உனக்கு ஆலோசனை சொல்லக் கர்த்தர் உன்னோடு இல்லை என்பதை உணர்வாய்!

அந்தத் தீமையின் பலனால் நீ பயத்தினால் தத்தளிக்கும்போது உனக்கு தேவனின் உதவி கிட்டாது! ஜாக்கிரதை!

என் வாழ்வை இருள் மூடும்போது

என்னைப் பனியின் குளிர் தாக்கும்போது

என் கண்ணுக்கு பாதை  மறையும்போது

என்னை அன்பற்ற வெறுமை பற்றும்போது

நான் கைவிடப்பட்ட நிலையில் வாடும்போது

பயம் என்னும் இருள் என்னைவிட்டு நீங்கும்வரை

என்னைவிட்டு நீங்காதிரும் என் நேசரே!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment