கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2108 உன் பாதைகாட்டியை நம்பி முன்னேறு!

2 சாமுவேல் 2:1 – 10 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி, நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார்.  எவ்விடத்திற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்….. அப்பொழுது யூதாவின் மனுஷர்வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்….. சவுலின் படைத்தலவனான…. அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை…. இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்….யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

சவுல் யுத்தத்தில் மரித்துப்போனான். அவனோடு அவனுடைய மூன்று குமாரரும் மரித்துப்போனார்கள். அதில் தாவீதின் நல்ல நண்பனான யோனாத்தானும் உண்டு. பல வருடங்களுக்கு முன்பே சாமுவேல் தீர்க்கதரிசி, தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தார்.

தாவீது உடனே ராஜாவாகிவிடுவான் என்று யாராகிலும் நினைத்திருந்தால் அது தவறு என்று இப்பொழுதாவது உணர்ந்திருப்பார்கள். சவுல் மரித்தபின்னரும் தாவீதால் இஸ்ரவேலை ஆள முடியவில்லை. சவுலின் படைத்தலைவனான அப்னேர் வேறொரு திட்டம் தீட்டியிருந்தான். சவுலின் குமாரர்களில் மிஞ்சியிருந்த இஸ்போசேத்தை இஸ்ரவேலின் ராஜாவாக்கினான்.

கர்த்தர் தாவீதை தெரிந்து கொண்டிருப்பாரானால் அப்னேருக்கு என்ன வந்தது? அவன் இஸ்போசேத்தை தெரிந்தெடுத்தான்.  இஸ்போசேத் ஒருபக்கமும், தாவீது யூதா கோத்திரத்தையும் ஆண்டார்கள்.

அதன் முடிவை 2 சாமுவேல் 3:1  நமக்கு இந்த கசப்பான சூழ்நிலையை விளக்குகிறது. தாவீதை சார்ந்தவர்களுக்கும், இஸ்போசேத்தை சார்ந்தவர்களுக்கும் இடையே வெகு காலமாக யுத்தம் இருந்தது,

தாவீது நினைத்தமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அவனை மலர்கள் தூவி யாரும் சிங்காசனத்தில் உட்காரவைக்கவில்லை! பெண்கள் ஆரத்தியெடுத்து வரவேற்கவுமில்லை! ஒரு கசப்பான சூழல் நிலவியது.

ஆனால் 2 சாமுவேல் 3 ல் நாம் படிக்கிறோம், தாவீது வரவரப்பலத்தான். சவுலின் குடும்பத்தாரோ வரவரப்பலவீனப்பட்டுப் போனார்கள் என்று.

வெகுகாலமாக யுத்தம் நிலவியது ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாவீதின் கரம் ஓங்கியது!

இதை வாசித்த நான் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தேன். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பின்னரும் எதுவுமே சுலபமாக முடியவில்லை!

சவுலால் தன்னுடைய உயிருக்குத் தப்பி ஓடினான். சவுலால் விரட்டியடிக்கப்பட்டான். எதிரியின் நாட்டில் தஞ்சம் கொண்டான். சவுல் மரித்தபின்னரும் போட்டிக்கு இன்னொரு ராஜா வந்துவிட்டான்.

நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இன்னும் எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் புலம்பியிருப்பேன். கர்த்தரை பின்பற்றிய தாவீதின் வாழ்வில்தான் எத்தனை தடைகள்!

நாம் சிலநேரம் இப்படிப்பட்ட தடைகளை பார்ப்பது இல்லையா? எல்லாமே சரியாகப்போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒரு தடை வந்துவிடும்.

தாவீதுடைய இந்த வனாந்திர வாழ்க்கை அவனுடைய சிங்காசன வாழ்க்கைக்கு அவனைத் தகுதிப்படுத்திற்று. அவன் சோர்ந்து போகவில்லை! அவன் கரம் பலத்தது!

ஒருவேளை இன்று நீ நினைப்பதெல்லாம் தடைப்பட்டுக் கொண்டிருக்கலாம்! தாவீது இன்று நீ இருக்கும் சூழலில்தான் இருந்தான்.ஆனால் அவன் சோர்ந்துபோகாமல்  தொடர்ந்து முன்னேறினான். கர்த்தரின் வழிநடத்துதலை கவனித்து, அவர் சத்தத்தைக்கேட்டு நடந்தான். கடைசியில் அவன் கரம் ஓங்கிற்று!

தாவீதைப்போல பொறுமையோடுக் காத்திரு! தடைகள் யாவும் நீங்கும்!

இன்று நீ உன் பாதையை அறியாமலிருக்கலாம் ஆனால் உன் பாதைகாட்டியை அறிவாய் அல்லவா? அவரை நம்பு! இளைப்பாறு! அவருடைய வழிநடத்துதலில் தவறு இருக்காது! ஒருநாள் இவை உனக்கு விளங்கும்!

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment