கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2109 மனதை அங்குமிங்கும் அலைய விடாதீர்கள்!

2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான்.  தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.

இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும்  ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும்  ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருத்தல் என்பது நமக்கு பிடித்த ஒன்றா என்ன? எங்கேயாவது காத்திருக்க வேண்டுமானால் அந்த நேரத்தில் படிக்க புத்தகத்தையோ அல்லது வேறே ஏதாவதையோ எடுத்து சென்று நேரத்தைக் கழிக்க மாட்டோமா? இப்பொழுதெல்லாம் புத்தகத்தை யார் தொடுகிறார்கள்! மொபைல் போன் தான் பொழுது போக்க கைவசம் இருக்கிறதே!

இங்கே தாவீது ஏழு வருடங்கள் காத்திருந்தான்! அந்த நாட்களில் என்னசெய்திருப்பான்? 3ம் அதிகாரம் கூறுகிறது அவன் ஆறு பெண்களை மணந்தான் என்று.  அதுமட்டுமல்ல! அந்த வருடங்களில் அவனுக்கு குறைந்தது ஆறு குமாரர் பிறந்தனர். பெண் குழந்தைகள் கணக்கில் எடுபடாவிட்டாலும், நிச்சயமாக சில பெண் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும்.

இன்னும் சில மாதங்கள் நாம் தாவீதைப் பற்றிப் படிக்கும்போது இந்த எப்ரோனில் ஏற்பட்ட சம்பந்தத்தால் அவன் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டதைப் பார்க்கலாம்!

எப்ரோனில் இந்தக் காத்திருப்பின் காலத்தில் தாவீது  தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கிக் காத்திருந்திருக்க வேண்டும்! அதற்கு பதிலாக அவன் கண்கள் அந்த தேசத்தின் பெண்கள் மேல் சென்றன! அவனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகி, இந்த உலகத்தின் ஆசைகளால் நிரம்பியது. அவன் விழித்திருந்து தன்னைக் காத்துக் கொள்ளாமல் தனக்கு பிடித்த பல பெண்களோடு வாழ ஆரம்பித்தான்.

நம்முடைய வாழ்விலும் இது நடக்கலாமல்லவா? நாம் நினைத்ததை அடைய முடியாமல் வருடங்கள் கழிந்து செல்லும்போது, நம்முடைய வழியில் வரும் எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். அப்படிப் பட்டவைகள் கர்த்தருடைய சித்தத்துக்குள்ளானவைகளா அல்லது அவரது சித்தத்துக்கு மாறுபட்டவைகளா என்பதை நாம் கவனிப்பதேயில்லை.

அதனால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விழித்திருந்து ஜெபிக்கும்படி கூறினார்.  இருதயத்தை அலையவிடாமல் ஜெபத்தால் காக்கவேண்டியது அவசியம்!

தாவீதின் எப்ரோன் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது அல்லவா! மனதை அலைய விடாதீர்கள்!  விழித்திருந்து ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment