கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2120 கர்த்தர் மாறாதவர் என்பதை புரிந்து கொள்ளுங்களேன்! – எதிர்பார்ப்பு 3

எபிரேயர் 13:8   இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ  வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள்.

அப்படிப்பட்ட ஒரே தன்மையுள்ள திடமான மெஷினைப் போன்ற நல்ல உறவை நாம் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிப்பேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் பழுதடையாத ஒரு உறவு, எப்பொழுதும் மாறாத ஒரு உறவு! எந்த வேளையிலும் நம்மைக் கைவிடாத ஒரு உறவு!

ஒரு நேரம் அன்பாகவும் அடுத்த நேரம் முகம் சுழித்தும் இருப்பவர்களுக்கு மத்தியில், ஒருநேரம் தயவாகவும் மறுநேரம் வெறுப்பாகவும் இருப்பவர்களுக்கு மத்தியில், ஒருநேரம் நல்லவர்களாகவும் மறுநேரம் கெட்டவர்களாகவும் இருப்பவர்களுக்கு மத்தியில்  என்றும் மாறாத ஒரே தன்மையுள்ள உறவை எங்கே தேடுவது?

அதனால் தான் எனக்கு பவுலின் இந்த வார்த்தைகள் மிகவும் பிரியம். கர்த்தராகிய இயேசு மட்டும்தான் நம்மிடம் ஒருநேரம் சூடாகவும் மறுநேரம் வெதுவெதுப்பாகவும்  இல்லாமல், என்றும் மாறாத தன்மையுள்ளவராயிருப்பார்.

பழைய ஏற்பாட்டில் ஒரு சிறு புத்தகமாக உள்ளது யோனாவின் கதை. ஒரு சிறிய மனிதனும் பெரிய மீனும் என்று நான் சிறு வயதில் கேட்ட கதை. ஆனால் இந்த யோனாவின் கதை வெறும் மீன் கதை அல்ல! நினிவே பட்டணத்துக்கு கர்த்தர் அவனை அனுப்பி அந்த ஊர் ஜனத்தை மனந்திரும்பும் படி பிரசிங்கச் சொன்னார். கீழ்ப்படியாமல் வேறு திசையில் ஓடிய அவன், மீன் வயிற்றிலிருந்து வெளி வந்தவுடன் நினிவே போய் பிரசங்கம் பண்ணினான்!  ஜனங்கள் மனம் திரும்பினார்கள்! யோனாவுக்கு கோபம் வந்துவிட்டது! அவன் அந்த ஜனங்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுக்க வேண்டும் என்று விரும்பினானே தவிர அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை.

ஆனால் இரட்சிப்பு என்பது நம்முடைய கர்த்தரின் மாறாத குணம் என்று அன்று அவனுக்கு புரியவில்லை! அவர் அன்பில் திடமானவர்! மாறாதவர்!

நம்மை இரட்சிக்கத் தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவை பரியந்தம் அனுப்பக்கூட  அவர் தயங்கவில்லையே!

பாவம் யோனா! அதை புரிந்துகொள்ளாமல் கோபப்பட்டான்.  இரட்சிப்பு என்பது அவரது மாறாத குணம் ஏனெனில் அவர் நம்மை அவ்வளவாய் நேசிக்கிறார்.  நேற்றும் இன்றும் என்றும் அவர் என்னை நேசிக்கிறார். அவருடைய மாறாத அன்பு ஒவ்வொரு நிமிடமும் என் வாழ்க்கையில் கிடைக்கும்!  எல்லா நேரத்திலும் அவர் என்னை நேசிப்பார்! ஒரு திடமான அன்பு!

இரவின் பயம் என்னை நெருடும்போது

கேள்விகளால் என் உள்ளம் வாடும்போது

வறண்ட பாலைவனம் பூந்தோட்டமாய் மாறும் வரை

என்னோடிரும் என்றும் மாறாத என் நேச கர்த்தரே   –   என்பதே இன்று என் ஜெபம்!

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment