கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2129 கர்த்தரின் பிரசன்னத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்!

2 சாமுவேல்: 6: 10,11  அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ….. கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்!

தாவீது கர்த்தருடைய  கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா. கர்த்தரின் பெட்டியைத் தொட்டதால் ஊசா உயிரிழந்ததைப் பார்த்த தாவீது அதைத் தன் ஊருக்கு கொண்டுவர பயந்தான்.

நான் அங்கு இருந்திருந்தால் அந்தப் பெட்டியின் அருகேயே செல்ல பயந்திருப்பேன்! அந்தப் பெட்டியை என் வீட்டுக்குள் கொண்டு வர எப்படி சம்மதிப்பேன்!

ஊசாவின் மரணத்துக்குபின் கொஞ்சம் வேதத்தை ஆராய்ந்து படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் தாவீது மறுபடியும் கர்த்தருடைய பெட்டியை எடுத்து செல்வதில் இருந்த தவறை செய்யவில்லை.

ஒருமுறை பெலிஸ்தர் தாங்கள் கைப்பற்றிய இந்த உடன்படிக்கை பெட்டியை, கர்த்தர் தங்களை வாதித்ததால் திருப்பி அனுப்பினர். அப்பொழுது கூட அவர்கள் ஒன்றும் கர்த்தர் இந்தப்பெட்டியைக் குறித்து கூறிய விதிமுறைகளைக் கைப்பிடிக்கவில்லை.  அந்த சமயத்தில் கர்த்தர் அவர்களைத் தண்டிக்கவில்லை. ஆனால் வேதத்தை அறிந்த இஸ்ரவேல் மக்கள் தவறு செய்தபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இஸ்ரவேல் மக்கள் அறிந்து செய்த தவறே தண்டனைக்குட்பட்டது. அதிலும் தாவீதுக்கு, இஸ்ரவேலின் தலைவனானதால் ஒரு பெரியப் பொறுப்பு அவன் தோள்களில் இருந்தது.

ஊசாவின் மரணத்துக்கு பின் கர்த்தருடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே வைக்கப்பட்டது.  எபிரெய மொழியில் இந்த பெயரின் அர்த்தம் , ‘வேலையாள்’ என்பது. 1 நாளா:13:13 ல் நாம் அவன் ஒரு லேவியன் என்று பார்க்கிறோம். வேதத்தின்படி, லேவியர்கள்தான் இந்த பெட்டிக்கு காவலராக இருந்திருக்கவேண்டும்.

ஊசாவின் மரணத்துக்குபின் ஓபேத்ஏதோம் இந்தப்பெட்டியைத்  தன் வீட்டுக்குள்  ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருப்பான் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் அவன் அதைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை 3 மாதம் வைத்திருந்தான். கர்த்தர் அவன் வீட்டை ஆசீர்வதித்தார் என்று பார்க்கிறோம்.

இதில் என்ன புரிகிறது? கர்த்தருடைய பிரசன்னத்தை ஒபேத்ஏதோம் தன்னுடைய இல்லத்தில் ஏற்றுக்கொண்டதால் அவனும் அவனுடைய குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டது.

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமையால் சாபமும், அவருடைய பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஆசீர்வாதமும் வந்து சேரும்!

இன்று கர்த்தருடைய பிரசன்னம் நம் வாழ்க்கையிலும் நம் இல்லத்திலும் இருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமா?

கர்த்தருடைய ஊழியத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவர் நடத்தும் பாதையில் நடந்து அவருடைய சித்தத்துக்குள் நிலைத்திருப்பதே அவருடைய பிரசன்னம் நம் வாழ்வில் இருப்பதின் அடையாளம்!

இதுவே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment