கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2140 உன் சந்ததியை ஆசீர்வதிக்க ஆவலாயிருக்கும் தேவன்!

2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன்.

இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம்.

தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டியதாகத் தெரியவில்லை. கணக்கில்லாத பெண்களை மணந்தும், மறுமனையாட்டிகளாகக்கொண்டும் திருமண பந்தத்தை அவமதித்தான். அப்படியானால் இந்த வாக்குத்தத்தம் எப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று நாம் நினைக்கலாம்!

கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தைப் போலத்தான் தாவீதிடமும் நீ என்னை பின்பற்றினால் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னுடைய சந்ததியையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார்.தேவனாகிய கர்த்தர் மேல் நம்முடைய வாழ்க்கை அமைக்கப்படும்போது மட்டுமே இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்படும்.

ஆனால் நாம் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய சித்தத்தின்படி வாழ ஆரம்பிக்கும்போது, நமக்குப் பிரியமானபடி வாழும்போது அதற்குரிய பலனும் நம்மைத்தொடரும் என்பதை நாம் மறந்தே போகிறோம். இதற்கும் தாவீதின் பிள்ளைகள் தான் நமக்கு உதாரணம்!

சில உணவு வகைகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று  தெரிந்தும், கண்களையும், நாவையும் கட்டுப்படுத்த முடியாமல் நாம் உண்டு விட்டு அதன் விளைவை அனுபவிப்பது இல்லையா? இதற்கு யார் பொறுப்பு ஆக முடியும்? நம்முடைய முடிவின் விளைவுதானே!  

ஆம் அப்படித்தான் தாவீதின் பிள்ளைகளும் நடந்து கொண்டனர். அவர்களுடைய தகப்பனாகிய தாவீதை எதிர்ப்பதாக நினைத்து தங்களுடைய வாழ்க்கையை மரணத்துக்கு உட்படுத்தினர்!

இன்று நாம் தேவனகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்!  அவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பற்றிகொண்டு நடக்கிறோம் அல்லவா?

உன் ஜீவனுள்ள நாளெல்லாம் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குத்தத்தம் எனக்கு ஒவ்வொருநாளும் புதிய பெலத்தைக் கொடுக்கிறது.

உன் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பேன் என்ற வாக்குத்தத்தம் என்னை தேவனை நன்றியோடு நோக்க செய்கிறது. அவரையே என் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

இன்று உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? பிள்ளைகளைக் குறித்த வாக்குதத்தம் உங்களிடம் உள்ளதா? கர்த்தர் உங்களுக்கு வாக்குக் கொடுத்திருப்பானால் இன்று உன் பிள்ளைகள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, ஒருநாள் நிச்சயமாக அவர்கள் தேவனைத் தேடுவார்கள்! உன் சந்ததி ஆசீர்வாதமாயிருக்கும்.

சந்திரனை எட்டிப் பிடிக்கும் ஆவலைப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறீர்கள்,  ஆனால் பரலோகத்தில் கால் வைக்கும் ஆவலைக் கொடுக்கிறீர்களா? 

 

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment