கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God

இதழ்:2153 நமக்குள் ஒளிந்திருக்கும் இச்சைகள்!

2 சாமுவேல் 11:3 … அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம்.

அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன்  திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது.

இந்த இடத்தில் நாம் சற்று சிந்திப்போம்!

நம்முடைய வாழ்க்கைப் பாதையில்  நாம் ஏதாவது ஒரு திருப்பு முனையை சந்தித்தது இல்லையா? சில நேரங்களில் நாம் தேவனுடைய பாதையைப் பின்பற்றும் நல்ல முடிவை எடுத்திருக்கலாம்! ஆனால் சில நேரங்களில் நாம் எடுத்த பாதை நமக்கு வேதனையையும், வலியையும் உண்டாக்கியிருக்கலாம். சில நேரங்களில் நாமே கதவைத் திறந்து சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைத்திருக்கிறோம்!

அதனால்தான் சற்றுநேரம் நாம் தாவீதுடன் அவன் அரமனையின் உப்பாரிகையில் தரித்திருக்கலாம் என்று  நினைக்கிறேன்.

நாம் முன்னரே பார்த்தமாதிரி தாவீது தேவனாகிய கர்த்தரை சிறுவயது முதலே நேசித்தவன். அவரைப் பிரியப்படுத்தும் வாஞ்சை கொண்டவன்! இது சற்று உன்னையும் என்னையும் போல இருக்கிறது அல்லவா?

நான் முன்னமே சொன்ன மாதிரி, தாவீது யுத்தத்துக்கு செல்லாமல் எருசலேமிலே தங்கியது தவறு இல்லை! அவனுடைய கடின உழைப்புக்கு நல்ல இளைப்பாறுதல் தேவைப்பட்டது! அவன் மதிய நேரத்தில் ஓய்வு எடுத்தது தவறு இல்லை! அவன் மாடியிலிருந்து எருசலேமின் அழகை ரசித்ததும் தவறு இல்லை! பத்சேபாளை தற்செயலாகப் பார்த்ததும் தவறு இல்லை!

ஆனால் அவளைப் பற்றி விசாரிக்க ஆள் அனுப்பினானே அப்பொழுது, அவள் திருமணமானவள் என்று அறிந்தவுடனே அவன் இன்னொருவனுடைய மனைவியைத் தொடமாட்டேன் என்று தன்னுடைய திசையைத் திருப்பியிருக்க வேண்டும் அல்லவா?

அன்று தாவீதுக்கு கர்த்தருடைய பாதையைத் தெரிந்து கொள்ளும் தருணம் அந்த சமயத்தில் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய மனிதனாய், கர்த்தருடைய சித்தத்தை செய்பவனாய் அவன் உள்ளே போய் தன்னுடைய வீட்டின் தாழ்ப்பாளை பூட்டியிருக்கலாம்.

இது நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் அல்லவா? தேவனைப் பிரியப்படுத்தும் நோக்கத்தோடு வாழும் நாம் சோதனையைக் கண்டவுடன் கதவை இழுத்துப் பூட்ட வேண்டாமா?

தாவீதின் அரமனைக்குள் நடந்ததை பூதக்கண்ணாடி போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் நாம்,  ஒரு பூதக்கண்ணாடியைக் கொண்டு நம்முடைய இருதயத்தை  நாம் பார்த்தால்,  நமக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் மாம்ச இச்சைகள், வாழ்வின் தவறான குறிக்கோள்கள், தேவையில்லாத பயங்கள், கசப்புகள் என்ற ஒரு விலங்கியல் பூங்காவையே பார்க்கலாம்.

இதை அறிந்த நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத்  தம்முடைய மகா பெரிய இரக்கத்தாலும் தயவாலும் மன்னிப்பை அருளியிருக்கிறார்! நம்முடைய நிலையை அறிந்து , நொறுங்கிய மனதோடு, அவருடைய கிருபாசனத்தை நெருங்கும்போது நமக்கு மன்னிப்பு உண்டு!

ஆம்!  நம்மில் மிகவும் மோசமானவர்களுக்குக் கூட அந்த மன்னிப்பு உண்டு!

நம்பி வா! நொறுங்குண்ட மனதோடு வா! மன்னிப்பு உண்டு!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment