கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2158 கள்ளத்தனத்தால் நற்குணத்தில் திவாலாகிய வேளை!

2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்.

சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா?

இதன் அர்த்தம் புரிகிறதா?

நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. நாம் ஒருநாளும் கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது.

பத்சேபாள் கர்ப்பம் தரித்ததைக் கேள்விப்பட்டவுடன், தாவீதுக்கு தன்னுடைய பிரச்சனைத்  தெரியும். அவனுடைய கள்ளத்தனத்துக்கு ஒரு கூட்டாளி தேவைப்பட்டது. அவனுடைய பெயர் காப்பாற்றபட வேண்டும். அவனுடைய ராஜ்யம் நிலை நிற்க வேண்டும். அப்படியானால் அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டாளி வேண்டும்.

தாவீது தன்னுடைய சேனைத் தலைவனான யோவாபுக்கு செய்தி அனுப்புகிறான். இங்குதான் கதை சுவாரஸ்யமாகிறது. ஒரு அசுத்தமான கை மற்றொரு அசுத்தமான கைக்கு உதவுவதை நாம் பார்க்க அதிகமாக காத்திருக்க வேண்டாம்.

இந்த சம்பவத்துக்கு பல வருடங்களுக்கு முன்பு 1 சாமுவேல் 26 ல், இந்த யோவாபின் சகோதரனான அபிசாய், நித்திரையில் இருந்த சவுலைக் கண்டு அவனைக் கொல்லும்படி தாவீதிடம் கூறுகிறான். ஆனால் அன்று தாவீதுக்கு கர்த்தரைப் பிரியப்படுத்தும் இதயம் இருந்தது. ஆதலால் மறுத்து விட்டான்.

பின்னர் 2 சாமுவேல் 2:8 ல் செருயாவின் மூன்று குமாரரைப் பார்க்கிறோம். அவர்கள் யோவாபும், அபிசாயும், ஆசகேலும் ஆவர். இந்த செருயா தாவீதின் ஒன்றுவிட்ட சகோதரன். அப்படியானால் இந்த மூவருக்கும் தாவீது சிறிய தகப்பன். இவர்கள் மூவரும் சேர்ந்து சவுலின் படைதலைவனான அப்னேரைக் கொலை செய்ததைப் பார்த்தோம்.

இப்பொழுது  தாவீதுக்கு குழப்பமான சூழ்நிலை! அவனுடைய பேரையும், பதவியையும் காப்பாற்ற, அவன் கள்ளத்தனத்தை மறைக்க ஒரு கூட்டாளி வேண்டும்.அதனால் அவன் யோவாபைத் தேடுகிறான்.

ஒருகாலத்தில் தேவனைத் தேடிய அந்த தாவீது இன்று கள்ளத்தனத்தை மறைக்க, இப்படிப்பட்ட காரியத்தை செய்ய கொஞ்சம் கூட கூசாத இன்னொருவனைத்  தேடுகிறான்.

தாவீது தன்னை சுற்றியுள்ளவர்களை தன்வசப்படுத்தும் சக்தி வாய்ந்தவன். அதே சமயம் யோவாபும் அப்படித்தான். தன்னை சுற்றியுள்ளவைகளை தன் கைவசப்படுத்த நன்கு அறிந்தவன். அவர்கள் ஒருவருக்கொருவர்  நல்ல வழியில் நடக்க உதவாமல், திருட்டுத்தனத்தில் கூட்டு சேர்ந்தனர். ஆகமொத்தம் இரண்டு பேரும் நற்குணத்தில் திவாலாகி விட்டனர்.

ஒரு நரிக்கூட்டத்தோடு நாம் சேர்ந்து போனால் நாமும் நரி போலத்தானே அலறுவோம்!

இன்று நாம் யாரோடு சேர்ந்து கொண்டிருக்கிறோம்?

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment