கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2163 இன்று எங்களை தீமையினின்று இரட்சியும்!

2 சாமுவேல் 11: 12, 13  அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்….. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத் தன் முன் அழைத்து புசித்து குடித்து வெறிக்கப்பண்ணுகிறான்.

என்ன பரிதாபம்! கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட இஸ்ரவேலின் ராஜா இத்தனை கேவலமாக தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் உபயோகப்படுத்தி உரியாவின் மனதை குடிபோதையால் கலங்கப்பண்ணி அவனைத் தன் மனைவியுடன் போய்த் தங்குமாறு செய்ய  முயற்சி செய்கிறான்.

அன்று தன்னை வேட்டையாடிய சவுல் தன் கைக்கு அருகே இருந்தபோது அவன் மேல் கை போட மாட்டேன் என்று உறுதியாக இருந்தானே அந்த தாவீதா இவன்???  மிகுந்த தயவுள்ள இருதயத்தைக் கொண்ட தாவீது இன்று இரக்கமில்லாதவனாகக் காணப்படுகிறான்.

உரியாவை எப்படி தன் வீட்டிற்குப் போக வைக்க என்றுத் தெரியாமல் தாவீது இப்பொழுது அவனுடைய ஐம்புலன்களையும் இழுக்கும் விதமான ராஜாவின் மேஜையில் வைக்கப்படும் உணவினாலும், ராஜாவின் திராட்சைத் தோட்டத்திலிருந்து வரும் மதுவினாலும் அவனை நிரப்புகிறான். அதிகமாய் குடித்து விட்டால் குடிபோதையில் தான் சொன்னதை செய்வான் என்ற எண்ணம். ஆனால் வேதம் தாவீது அவனை வெறிக்கப்பண்ணினான் என்று கூறினாலும் அவன் புத்தி பேதலிக்கும் வரை குடித்ததாகத் தெரியவில்லை.

தாவீது தன் இள வயதில் கட்டுப்பாடோடு வாழ்ந்தவன் தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவன் தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தாமல் அநேக மனைவி மாரையும், மறுமனையாட்டிகளையும் சேர்க்க ஆரம்பித்தான். அவனுடைய இந்த கட்டுப்பாடற்ற தன்மை ஒருநாள் பொங்கி தன்னுடைய சேனையின் வீரனான உரியாவின் மனைவியைத் தொட செய்தது.

ஒரு ராஜ்யத்தை கட்டியாளத் தெரிந்த அவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனுக்கு தன் குடும்பத்தை எப்படி கட்டுப்படுத்தத் தெரியும்? அவனுடைய இந்த பெலவீனத்தால், தாவீதின் குடும்பம் பின்னால் பல கஷ்டங்களை அனுபவித்ததை வேதம் நமக்கு காட்டுகிறது.

நம்மை பாவத்தில் விழவைக்கும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கிருபையை கர்த்தர் நமக்குக் கொடுக்குமாறு ஜெபிப்போம்.

தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளும் ஆவல் ஒவ்வொரு நாளும் நமக்கு வேண்டும். அவருடைய பலத்த புயத்துக்குள் நம்மை ஒப்புக்கொடுத்து கட்டுப்பாடோடு பரிசுத்தமாய் வாழ ஜெபிப்போம்.

கர்த்தாவே எங்களை இன்று சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். ஆமென்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment