கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2178 எல்லாமே உண்டு ஆனால் தேவ பிரசன்னம் இல்லையே!

2 சாமுவேல் 12: 1   … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம்.

இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே சொல்லப்பட்டது என்று புரிந்தது!

நாம் முன்னரே பார்த்தவிதமாய் நாத்தான் தாவீதின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒருவன் தான். அவன் தேவனுடைய செய்தியை தாவீதுக்கு எடுத்துரைத்த  தீர்க்கதரிசி அரமனை தீர்க்கதரிசி!

நாம் நம்மை சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமே!

பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான்.அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான்.

என்ன????  ஆம்!  தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது! பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது! பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது!  அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை!

 கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை!  நிச்சயமாக ஒரு கிசுகிசுப்பு அரண்மனையை சுற்றிக் காற்றில் பரவிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் நாத்தான் தாவீதின் அரண்மனைக்குள் வந்தபோது தாவீது எந்தக் குற்றமுமே அறியாத ஒரு அப்பாவிப்போலத்தான் நடந்து கொண்டான்.

நாத்தான் தாவீதின் சமுகத்தில் தேவ செய்தியோடு நின்றதை சற்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு தைரியசாலியாயிருந்திருப்பான் அவன். சாதாரண வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஏழை, பணக்காரன் கதையை அவன் தாவீதிடம் ஆரம்பிக்கிறான். அவன் கதையில் ஒரு நல்லவன் கெட்டவன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தவேயில்லை.

நாத்தான் உபயோகப்படுத்திய  ஏழை பணக்காரன் என்ற வார்த்தை தாவீதுக்கு நன்கு புரியும். அவன் ஏழ்மையை நன்கு உணர்ந்தவன். சவுலால் ஒரு பறவையைப் போல விரட்டப்பட்டபோது மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன். பசியும், தாகமும் அவன் நன்றாக அறிந்த ஒன்றே!  பின்னர் இந்த ஏழை, எருசலேமின் அரண்மனையில் ராஜாவானான். அவன் கண்களால் பார்த்த எதையும் அவன் அடைய முடிந்தது!

ஆதலால் இந்த ஏழை பணக்காரன் என்ற வார்த்தைகள் இரண்டுமே தாவீதுக்கு பொருந்தியவைதான். கர்த்தர் அவன் இந்த இரண்டு ஸ்தானத்தையுமே மறந்து விடக்கூடாது என்று நினைத்தார்.

நம்முடைய வங்கியில் இருக்கும் கணக்கை வைத்து கர்த்தர் நம்மை ஏழை என்றும் பணக்காரன் என்றும் கணிப்பது இல்லை என்று நமக்கு நன்கு தெரியும்!

தாவீதுக்கு எதுவுமே சொந்தம் இல்லாதிருந்தபோது அவனிடம் கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. தாவீதுக்கு எல்லாமே சொந்தமான வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் அவனோடு இல்லையே!

அவனுடைய வாழ்க்கையில் எல்லாம் இருந்தபோதும், ஒன்றுமே இல்லாமல் வெறுமையாய் ஆகிவிட்டது!

இன்று கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறார்? ஏழையாகவா? பணக்காரராகவா?

ஒன்றுமே இல்லாத வேளையிலும் நாம்  கர்த்தருடைய பிரசன்னத்தோடு பணக்காரராய் வாழமுடியும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment