கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2182 நல்ல மரத்தின் வேரைப் போன்றது நம் எண்ணங்கள்!

2 சாமுவேல் 12: 4  அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில் வந்தான் என்று இந்தக் கதையில் கூறப்படவில்லை. ஆனால் அவனுக்கு உணவு தேவைப்பட்டது.

என்ன கொடூரம் இது! அந்த வழிப்போக்கனுக்கு உணவு சமைக்க தனக்குண்டான அநேக ஆடு மாடுகளிலிருந்து ஒன்றை அடிக்க மனதில்லாமல், அந்த ஏழையுடைய அன்புக்குரிய ஆட்டுக்குட்டியை அடித்து சமைக்கிறான் என்று பார்க்கிறோம். எப்பொழுது அந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ண வேண்டும் என்று தன் மனதில் முடிவு செய்தானோ அப்பொழுதே அது தன்னுடைய ஆட்டுக்குட்டி அல்ல, மாற்றானுடையது என்றும் முடிவு செய்து விட்டான்.

அவன் அந்த ஏழையுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து அடித்தான். வேதம் நமக்கு கூறுகிறது இதைத்தான் தாவீது உரியாவுக்கு செய்தான் என்று. உரியாவை யுத்தத்தில் முன்னிலையில் நிறுத்தி, மற்றவர்களை பின்வாங்க செய்து அவனை படுகொலை செய்தான்.

நான் முதலில் நாத்தான் ஒரு கதையோடு தாவீதிடம் வந்த போது, அது தாவீது பத்சேபாளை தனக்கு சொந்தமாக்கியதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தக் கதையின் அம்சமே தாவீது உரியாவை தந்திரமாக யுத்தத்தில் படுகொலை செய்ததுதான் என்று இப்பொழுத்தான் புரிந்து கொண்டேன்.

பத்சேபாள் கர்ப்பவதியான செய்தி கேட்டவுடனே தாவீதிற்கு இருந்த ஒரே பிரச்சனை அவளுடைய கணவன் உரியா தான்.  ஆதலால் அவனை அடித்து கொலை செய்த தாவீது அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

நாம் நம்முடைய நடத்தையைப் பற்றி கவனித்தால் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் நம் கவனத்துக்கு வரும். ஆனால் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் எண்ணங்கள் தான். தாவீது பத்சேபாளை தன் அரண்மனைக்கு அழைத்து வந்தது, ஏதோ துக்கத்தில் இருந்த ஒரு விதவைக்கு ஆறுதல் கொடுக்க அல்ல! யுத்தத்தில் கணவனை இழந்த பத்சேபாளின் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க அல்ல! கர்த்தர் தாவீதின் உள்ளத்தை அறிவார்!  அவன் இருதயத்தின் எண்ணங்களையும், எண்ணங்களின் தோற்றங்களையும் அவர் அறிவார்!

அதனால் நாத்தான் தாவீதிடன் கர்த்தர் அவன் இருதயத்தை அறிவார் என்று ஞாபகப்படுத்தத்தான்  வந்தான்.

ஒரு நல்ல மரத்திற்கு அதின் வேர் எப்படியோ அப்படித்தான் நம் இருதயத்தின் எண்ணங்களும்!  கெட்ட எண்ணங்கள்  நம்முடைய ஆத்துமாவிற்கு விஷம் போன்றது! கர்த்தர் உன்னுடைய உள்ளத்தின் ஆழத்தை அறிவார்! உன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் எண்ணத்தையும் அறிவார்! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment